1 டிசம்பர், 2013

சமூக கடமை

"தேவாங்க மகாஜோதி" தேவாங்க சமூக இதழ் தரும் தகவல்கள்

1928 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் உள்ள தேவாங்கர்களுக்காக, சென்னை வண்ணார பேட்டையிலிருந்து திரு. ஆர்.கோபால் அவர்களால் வெளியிடப் பட்டு வந்த தேவாங்கர் சமூக இதழான தேவாங்க மகாஜோதி இதழில் சமூக கடமை என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரை.
தேவலமத  தத்துவத்தின் படியும் ஏனைய சமய  நூற்களின் படியும்  ஒரு மனிதனுடைய ஆதர்ஸன ஜீவிய ஒளி சமூகத்தின் மத்தியிலேயே பிரகாசிக்கிறது.


நமது ஷேமத்தை விரும்பும் எவரும் முதலில் சமூகத்தைக் கவனிக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது. தன்னலத்தின் அஸ்திவாரம் சமூக நலத்தில் அடங்கி நிற்கிறது.  இவ்வுண்மையை மேனாட்டு வாசிகள் நன்கு அறிந்திருக்கின்றனர். அங்குள்ள ஒவ்வொருவனும் தன்னுடைய தனி உயர்வை விட சமூக மேம்பாட்டிலேயே மிகுதியும் சிரத்தையும் கொள்கிறான். அதனலேயே அவர்களுடைய வாழ்க்கை நிகரற்று விளங்குகிறது.

இந்தியாவில் சிறப்பாக, தேவாங்க சமூகத்தில் குல நலத்தைப் பற்றிய கவலை சிறிதும் தோன்றாதிருக்கிற தென்பதை பன்முறை விளக்கியுள்ளேன். மீண்டும் குறிப்பிடத்தான் வேண்டியிருக்கிறது ஏதோ இரண்டொரு பெரியோர்கள் நம்மில் தோன்றினரெனினும் அவர்களும் குறிப்பாக குல முன்னேற்றத்தைப் பற்றி கவனிக்கவில்லையென்றே கூற வேண்டி யிருக்கின்றது.

 பண்டை இந்தியாவில் நமது முன்னோர்கள் பேரும் புகழும் பெற்று வாழ்ந்து வந்தார்கள். என்றால் அக்காலத்தில் சமூக உணர்ச்சி அவர்களிடையே அதிதீவிரமாயிருந்ததே காரணமாகும்.
எந்த தேசமும், எச்சமூகமும் இப்பேருணர்ச்சியைப் பெறாத வரையில் அத்தேசத்திற்கு அல்லது சமூகத்திற்கு மீட்சியில்லை என்பது நிச்சயம் 

இதைக் குறித்து பல மேதாவிகள் அவ்வப்போது கூறியுள்ளார்கள். உதாரணமாக 1910 ஆம் ஆண்டில் அச்சமயம் பிரிட்டிஷ் கன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவராயிருந்த லார்ட் மிடில்டன் என்பவர் எடின்பர்க் நகரில் ஜாதீய ஊழியம் என்னும் விஷயத்தைப் பற்றி செய்த சொற்பொழிவில்.
“எந்த ஜாதீயராயினும் அவர்கள் கட்டுப்பாடுடையர்களாயும், சமூக நலப் பிரியர்களாயும் சமூக ஊழியம் செய்வதில் அரிய தியாகம் செய்யக் கூடியவர்களாயும் இருக்க வேண்டும். இக்குணங்களைக் கொண்டிராத ஜாதியினர் எவராயினும் அவர்கள் தாழ்ந்த ஸ்திதியையே அடைவர்.
அடக்கமும், ஐக்கியமுமில்லாமல் தன்னலத்தைப் பெரிதாகக் கருதி ஒவ்வொருவனும் தொழில் புரிந்து வருகிறான் சமூகம் ஒரு சரீரம் போன்றதென்றும் ஒவ்வொரு மனிதனும் அதில் ஒரு அவயமென்றும்,  சமூகத்தின் ஷேமத்தைக் காக்க, தான் கடமைப்பட்டிருக்கிறான். என்பதையும் சமூகத்தின் நன்னிலையைப் பொறுத்தே தன்னுடைய ஷேமமும் இருக்கிறதென்பதையும் ஒவ்வொருவனும் அறிந்து அதன்படி நடக்க வேண்டும்”. என்று கூறியிருப்பதிலிருந்து சமூகக் கடமையின் உயர்வையும், அவசியத்தையும் ஒருவாறு அறியலாகும்.

லார்ட் மிடில்டன் கூற்றையொப்ப நம்மவர் தற்போது கொண்டுள்ள சுய நலப்பற்றை விடுத்து குலநலப்பற்றில் சிறந்தவர்களாய் விளங்க வேண்டும். நமது சமூகத்தின் கேவல நிலையை நம்மவர்கள் அறியாமல் இல்லை. சற்றேறக்குறைய ஒவ்வொரு தேவாங்கரும் குலஸ்திதியை அறிந்திருந்தும் அறியாதவர்கள் போலவே இருந்து வருகின்றனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது போல் இந்த நிலையே நீடித்துக்கொண்டு போவது பேராபத்தாய் முடியும்.

ஆரம்பக் கல்வி தட்சிண இந்தியாவில் சற்றேரக் குறைய எல்லா வகுப்பினரிடையிலும் பரவி வருக்கிறதாயினும் நமது சமுகத்தில் மாத்திரம் வியாபிக்க முயற்சி செய்யப்படவில்லை சென்ற காலத்தைப் போலவே நிகழ்காலத்தையும் பயனின்றி நாம் கழித்து விடுவதாயின் தாழ்த்தப்பட்டவர் முதல் அனைவரும் உச்ச நிலையில் விளங்கப் போகும் எதிர்காலத்தில் நம்மவர்கள் கதியாதாயிருக்கும்? பெருமுயற்சியில் ஈடுபட்டு பெரும்பாலோர் உழைத்து வர வேண்டியிருக்க, சிறு முயற்சியிலேனும், சில சகோதரர்களேனும், வேலை செய்ய வேண்டியது அவசியமன்றோ!


மிருகாதி ஜீவராசிகளைப் போல ஆறறிவில் சிறந்துவிளங்கும் மானிடராகிய நாமும் கேவலம் உண்பதிலும் உறங்குவதிலும் மாத்திரமே நமது ஜீவியத்தை வியர்த்தமாக்கும் பரிதாப ஸ்திதியை நம்மவர்கள் என்றுதான் அகற்ற முற்படுவார்கள்?

சவுடாம்பிகா செய்தி மாத இதழ் 2009 ம் வருடம் சமூகம் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் வெளி வந்த கட்டுரை - 
ஆசிரியர் திரு. M.  சரவணன். அருப்புக்கோட்டை