25 டிசம்பர், 2013

சித்திராபுத்திர நாயனார் கதை


                                                                   
         

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர்கள் ஊரின் பல இடங்களில் 2,3 தெருக்காரர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வருடமும் சித்திரையில் வரும் பெளர்ணமியில் [சித்ரா பெளர்ணமி] தின இரவில் தெரு நடுவில் பந்தல் இட்டு அதில் கும்பம் அலங்கரித்து பூஜைகள் செய்து இந்த சித்திராபுத்திர நாயனார் கதைகளை படிக்கிறார்கள்

அது சமயம் தெரு மக்கள் பந்தலுக்கு வந்தோ அவரவர்கள் வீட்டு வாசல்களில் அமர்ந்தோ இக்கதையை கேட்கிறார்கள்.

பலர் தம் வேண்டுதல்களின் பேரில் தின்பண்டங்களை சாமிக்கு படைத்து விட்டு அனைவருக்கும் கதை படித்து முடிக்கும் வரை ஒவ்வொருவராக ஒவ்வொரு தின்பண்டமாக தெரு முழுவதும் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். கதை கேட்பதன் பலன்


நல்ல நினைவு வைத்து நன்றாக கேட்டவர்கள்
கதை முழுவதும் கேட்டவர்கள் - கயிலை பதம் பெறுவர். எந்த மனக்குறைவும் நீங்கும்.
இந்தக்கதையை எள்ளளவுந் தப்பாமல் கேட்டவர்கள் எல்லாம் கிளையுடனே வாழ்ந்திருப்பர்ஈஸ்வரனார் வாக்கு.

மனித வாழ்க்கையில் தெரிந்தே தவறுகளைச் செய்து கொண்டிருப்பவர்களும் உண்டு, தவறு என்றே தெரியாமல் செய்து விட்டு அதற்காக வருந்துபவர்களும் உண்டு. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் தவறு என்று ஆகிவிட்டால் அதற்கான தண்டனை கட்டாயம் உண்டு.

இந்தத் தண்டனைகளில் இருந்து விடுபட இறைவனை நாடுவதே சரியான வழி. ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் அவன் செய்யும் நற்செயல்கள், தீய செயல்கள் என அனைத்துமே கணக்கிடப்பட்டு வருகின்றன. இந்தக் கணக்குகளைப் பராமரிப்பதற்காகவே சித்திரபுத்திரன் என்கிற தேவலோக கணக்காளன் இருப்பதாகவும் இந்து சமய புராணங்கள் தெரிவிக்கின்றன. இவர் சித்திரகுப்தன் என்றும் அழைக்கப்படுகிறார்.

இந்த கதையின் சுருக்கம் :-

 இந்த உலகின் தீய மற்றும் நற்செயல்களான பாவ புண்ணியங்களைக் கணக்கிடுவதற்காகச் சிவபெருமான் ஒரு தங்கப்பலகையில் சித்திரம் ஒன்றை வரைந்தார். இந்த சித்திரத்தைக் கண்ட பார்வதி தேவி, அந்தச் சித்திரத்தை உயிர்ப்பிக்க வேண்டினார். சிவபெருமானும் பார்வதிதேவியின் வேண்டுதலுக்காக அதனை உயிர்ப்பித்தார்.

சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் சித்திரத்தில் இருந்து உயிர்ப் பெற்றதால் அவர் சித்திர புத்திரன் என்ற பெயரைப் பெற்றார். சிவபெருமான் அவரிடம், மூவுலகிலும் உயிருடன் இயங்கும் அனைத்து உயிர்களின் தீய மற்றும் நற்செயல் குறித்த கணக்குகள் பற்றிய விவரங்களையும் கணக்கிட்டு எமதர்ம ராஜாவுக்கு தெரிவித்து அவருக்கு துணையாக இருக்கும்படி கட்டளையிட்டார்.

அதன்படி, சித்திரபுத்திரனும் சிவபெருமானின் இருப்பிடமான கயிலாய மலையில் இருந்து அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரித்து, சிவபெருமானிடமும், எமதர்ம ராஜாவிடமும் தெரிவித்து வந்தார் என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது.

 இந்திரன் தனக்கு குழந்தைப் பேறு அளிக்க வேண்டுமென்று இந்திராணியுடன் சேர்ந்து, பல தான தர்மங்கள் செய்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தான்.

கடும் தவத்தினை கண்ட சிவபெருமான். இந்திரனுக்கும், இந்திராணிக்கும் குழந்தை பேறு கிடையாது ஆகவே என்ன செய்வது என்று யோசித்த சிவபெருமான் காமதேனுவை அழைத்து, இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோரின் தவத்தை எடுத்துச் சொல்லி, சித்திர புத்திரனை அவர்களுக்காக பெற்று கொடுக்கும்படி கட்டளை இட்டார்.

 சித்திராபுத்திரனிடமும் இந்திரனுக்கு மகனாக இருந்து, சிறிது காலம் அவனுடைய கவலையைத் தீர்க்கும்படி அருள்புரிந்தார். அதன்படி சித்திரை மாதம், பவுர்ணமி நாளன்று காமதேனுவாகிய பசுவின் வயிற்றில் ஏடும், எழுத்தாணியும் கொண்டு சித்திர புத்திரன் பிறந்தார்.

இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்ட இந்திரன் மற்றும் இந்திராணி ஆகியோர் தங்கள் குழந்தையாக வளர்த்து வந்தனர். இந்திரனின் மகனாக சிறிது காலம் வளர்ந்த சித்திர புத்திரன் மீண்டும் அனைத்து உயிர்களின் கணக்குகளையும் பராமரிக்க கயிலை அடைந்தார்.

இக்கதையில் சொர்கம் என்றால் என்ன. நரகம் என்றால் எப்படி இருக்கும் என்பதும் விளக்க பட்டிருக்கிறது.

சித்திரபுத்திரரின் கணக்கு எப்படிபட்டது என்பதை விளக்க என்றும் பதினாறு வயது மார்க்கண்டேயன் கதையும்

சித்திரபுத்திரனரையோ அல்லது சிவனையோ கும்பிடாதவர்கள் கதி என்னவாகும் என்பதை விளக்க செட்டிச்சி அமராவதி கதைகளும் உள்ளன

சித்திரை நோன்பின் பலன்......... மனிதன் உயிருடன் இருக்கும் போது செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஏற்றவாறு அவனுடைய இறப்புக்குப் பின்பு, அவனுடைய ஆன்மாவானது அதற்கான பலன்களை அடைகிறது. அவன் செய்த நற்செயல்களுக்கு நற்பலன்களையும், தீயசெயல்களுக்குத் தண்டனைகளையும் அந்த ஆன்மாஅடைகிறது.

இந்தப் பூமியில் நாம் செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவன் சிவபெருமான் சித்ர குப்தரைக் கொண்டு கணக்கிட்டுக் கொண்டிருக்கிறார். தெரியாமல் செய்த தவறு களை மன்னிக்க வேண்டியும், இனி எந்தத் தவறையும் செய்யப் போவதில்லை என்பதை உறுதியாகக் கொண்டும் சித்திர புத்திரரை வழிபட வேண்டும்.


இப்படி வழிபடுவதால், இறப்புக்குப் பின்பு, ஆன்மாவிற்குத் தீய செயல்களில் இருந்து விடுவிப்பு கிடைப்பது டன், அந்த ஆன்மா நரகம் செல்லாமல் காப்பாற்றப்பட்டு சொர்க்கத்துக்கு அனுப்பப்படும் என்கிற தொன்ம நம்பிக்கை உள்ளது. மேலும் சித்ரகுப்தரை வணங்குபவர்கள் கேதுவால் ஏற்படும் தொல்லைகளில் இருந்தும் விடுபடுவார்கள்