திரு. ஸ்ரீசிவன் ஸ்வாமிகள் எழுதிய ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற புத்தகத்தில் இருந்து
1. தூய மந்தரம்
2. மகேந்திர ஜாலம்
3. தீய மந்தரம்
போன்றவைகள் ஆதியிலிருந்தே
சாஸ்திரங்களில் இருந்து வருகின்றன. தூயமந்திரத்தின் மூலம் ஆத்ம ஸஞ்சாரத்தையும், அற்புத
சாதனைகளையும் புரிந்து வந்தனர். மகேந்திர ஜாலத்தின் மூலம் சிலர் அற்புத வித்தைகளையும்,
சிலர் வியக்கதக்க வித்தைகளையும் புரிந்து வந்தனர்.
இந்த காலத்தில்
இதே கலைகளில் பயிற்சி பெற்றிருக்கும் பெரும்பாலோர் அவைகளை யோக்கியமற்ற முறையில் பயன்
படுத்தி வருகின்றனர். இவர்கள் தங்களை தெய்வாம்சம் பொருந்தியவர்களைப் போல் பிறர் கருதி
வணங்க வேண்டும் என்ற நோக்கத்தினாலும், குறுக்குவழியில் பணத்தை குவித்துவிட வேண்டும்
என்ற நோக்கத்தினாலும் இந்த வித்தைகளை வேறு வழியில் திருப்பி வருகின்றனர். பக்தர்களை
நம்ப வைப்பதற்காக ஒர் தெய்வ பூஜையையும், ஹோமங்களையும் கையாண்டு வருகின்றனர்.
இவர்கள் விபூதியையும்,
குங்குமத்தையும், விக்ரஹங்களையும், ஆபரணங்களையும் வெறும் கையினால் வரவழைத்து காட்டும்
பொழுது, பகுத்தறிவைக் கொண்டவர்கள் கூட, அவர்களை அவதாரமாக கருதி, அவர்களுக்கு காணிக்கை
செலுத்தி வணங்கியும் வருகிறார்கள்
பொதுவாக, மாஜிக்
வித்தைகளின் மூலம், திடீரென்று ஓர் செடியை உற்பத்தி செய்து காட்டலாம். ஆனால் காடுகளையோ
அல்லது சாலைகளில் மரங்களையோ தோன்ற வைக்க முடியாது. ஆடை உடைகளை நம் கண்ணெதிரிலேயே கொளுத்தி
சாம்பலாக்கி அதே சாம்பலில் இருந்து அதே ஆடைகளை வரவழைத்து விடலாம். ஆனால் இக்கலைஞரின்
முன்னிலையில் நாம் ஓர் ஆடையை சாம்பலாக்கினால் அக்கலைஞரால் அந்த ஆடையை வர வழைக்க முடியாது.
ஒர் காலி பெட்டியை நம் கண் எதிரிலேயே பூட்டி விட்டு மறுபடியும் திறந்து பார்க்கும்
பொழுது பெட்டி நிறைய வேஷ்டிகளையும், புடவைகளையும் காண வைக்கலாம். ஆனால் கைத்தறிகளையும்,
மில்களையும் ஒழித்து கட்டிவிட்டு ஜவுளிகடைகளை தோற்ற வைக்க முடியாது. ஓர் அண்டாவில்
குடிநீரையோ, கூடைகளில் தான்யங்களையோ திடீரென்று நிரப்பி வைத்து காண்பிக்கலாம். ஆனால்
குடிநீர் தவிப்பையோ, தான்யங்களின் பஞ்சத்தையோ தடுத்து நிறுத்திட முடியாது. பணநோட்டுகளையும்,
டாலர்களையும் உதிர்க்க வைத்து காண்பிக்கலாம். ஆனால் நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையை
நிவர்த்திக்க முடியாது. இவைகளை எல்லாம் நீங்களும் அறியாதவர்கள் அல்லர். இத்தகைய அபார
வித்தைகளை ஓர் மாஜிக் கலைஞர் காட்டும் போது அவரை நாம் பாரட்டுவதுடன் நிறுத்திக் கொண்டு
விடுகிறோம். ஆனால் தெய்வீகத்தைப் போல் காட்டிக்கொள்ளும் ஒருவன் அதே வித்தையை வேறு விதத்தில்
காட்டும் பொழுது, அவனை நாம் வணங்க ஆரம்பித்து விடுகின்றோம்.
பொதுவாக மாந்த்ரீக
வித்தைகள் சிற்சில அற்ப தேவதைகளின் உதவியால் புரியப்படுபவைகள் ஆகும். மேலே கூறப்பட்டிருக்கும்
வித்தைகளுள் கண்கட்டி என்ற வித்தையும் ஒன்றாகும்
நினைத்த மாத்திரத்தில்
மாயமாக வரவழைத்து காண்பிக்கப் படுபவைகள் எங்கே இருந்து வருகின்றன? பகவான் அனுப்பி வைக்கிறாரா;
கிடையாது. இவைகள் அனைத்தும் மந்திரவாதிகள் தங்களுடைய வசத்தில் ப்ரத்யேகமாக வைத்துக்
கொண்டிருப்பவைகள் ஆகும். மந்திரவாதிகள் அவைகளை எந்த இடத்தில் எந்த விதத்தில் கொண்டு
வைக்க வேண்டும் என்று நினக்கிறார்களோ அந்தந்த விதங்களில் அந்தந்த தேவதைகள் கொண்டு வந்து
விடும். உதாரணமாக ஓடிக்கொண்டிருக்கும் ஓர் மோட்டார் காரில் பெட்ரோல் காலியாகிவிட்டால்
காரில் அமர்ந்திருக்கும் மந்திரவாதியால் தனது வீட்டில் வைத்திருக்கும் பெட்ரோலை காரில்
நிரப்பி விடலாம். இதே விதமாக கையில் பணமில்லாத சமயத்தில் ஒர் கடையில் ஒர்சாமானை வாங்கி
விட்டாலும் வீட்டிலிருக்கும் பெட்டியிலிருந்து தேவைபடும் துகையை ஒரே நொடியில் கைக்கோ,
மணிபர்ஸீக்கோ வரவழைத்து கொள்ளலாம். ஆனால் இத்தகைய வித்தைகளை புரிவதற்கு முன்கூட்டியே
அவைகளுக்குற்ற சில பூர்வாங்க வேலைகளை முடித்து வைத்தாக வேண்டும். இது ஓர் தேவதையின்
சாதனையாகும். சிற்சில வித்தைகளுக்கு வெவ்வேறு தேவதைகள் ஆதாரமாக இயங்கி வருகின்றன. இத்தகைய
சாதாரண தேவதைகளைத் தவிர துர்தேவதை, மைவேலை போன்றவைகளினால் நம்மை ஒருவன் வசியபடுத்தி
ஏதாவது நஷ்டத்தையும், கெடுதலையும் விளைவிக்கலாம்.
இத்தகைய ஓர் தீய
மந்திரவாதியின் பேச்சுக்கு நாம் [தனிமையில் இருக்கும் போது] செவி சாய்த்து வந்தாலும்
அல்லது அவனுக்கு அனுதாபம் காட்டி வந்தாலும் நம்மில் மனோபலம் குன்றியவர்கள் சில நொடிகளில்
அவனுக்கு வசமாகிவிடலாம். இத்தகையவன் தனது தகாத நோக்கத்திற்கு நம்மை பயன்படுத்தி உயிருக்கு
ஹானியும் விளைவிக்கலாம்.
ஒர் செப்பிடு வித்தைக்காரன்
ஒருவனுடைய சுய நினைவின்மையின் மூலமாகவும் அகற்றி விடலாம். வேடிக்கை [வித்தை] பார்க்கும்
கூட்டத்தினிடையே தனது இஷ்டத்திற்கிசையும் யாராவது ஒருவனை செப்பிடு வித்தைகாரன் படுக்க
வைத்து மயக்கி துணியை போட்டு மூடி விடுவான் பிறகு படுத்தவனின் மூலமாக வேடிக்கையை கவனிப்பவர்களுடைய
அங்க அடையாளங்கள், கைகளில் இருக்கும் பொருள்கள் பைக்குள் பத்திரபடுத்தியிருக்கும் பணத்தின்
துகை போன்றவைகளை தவறாமல் சொல்ல வைத்து விடுவான். அதாவது படுத்திருப்பவன் மூலமாக தேவதை
சொல்லி விடுகிறது. அந்த வேடிக்கையை கவனித்து பார்பவர்களின் விபரங்களைத்தான் தேவதையால்
கூறமுடியுமே தவிர, தெருவில் போய்க்கொண்டிருக்கும் மற்றவர்களின் விபரங்களை கூறமுடியாது.
இந்த வித்தையை வைத்து அந்த வித்தைகாரன் அனைவரையும் பயமுறுத்தி ரக்ஷையை விற்று விடுவான்.
அந்த ரக்ஷையினால் ஒருவித பலனும் நிச்சயம் கிடைக்காது.
தெய்வங்களின் உபாஸகர்கள்
என்று விளம்பரபடுத்திக் கொள்ளும் இக்காலத்திய சிலர், நம்முடைய காகிதத்திலிருக்கும்
கேள்விகளை பார்காமலேயே பதில் அளிப்பவர்களாகவும், மற்றும் சிலர் மை போட்டு பிரசன்னம்
சொல்பவர்களாகவும் ஜீவித்து வருகிறார்கள். இவர்களுள் ஓர் முந்தியவனுக்கு நமது கேள்விகளை
எழுதி கவருக்குள் போட்டு ஸீல் வைத்து அனுப்பி விட்டால் அந்த உபாஸகர் கவரை பிரிக்காமலேயே
ஒவ்வொரு கேள்விக்குள்ள பதிலையும் நம்முடைய ஸீல் வைத்த கவரையும் நமக்கு திருப்பி விடுவார்.
அதாவது நம்முடைய கவர் அவனுடைய கையில் சேர்ந்து விட்டால் இக்ஷிணி போன்ற தேவதை கவருக்குள்
இருக்கும் கடிதத்தை உபாஸகனுடைய பார்வைக்கு காண்பித்து விடும். அந்த உபாஸகனும் தனக்கு
தோன்றும் ஏதாவது பதில்களை வரிசைக்கிரமமாக எழுதி அனுப்பி விடுவான்.
பிரசன்னம் பார்க்கும்
பிந்தியவர்களோ, நாம் நம்முடைய மனதில் எந்த விதமான சந்தேகத்தையோ, எண்ணத்தையோ கொண்டிருக்கிறோமோ
அவைகளைத்தான் குட்டி தேவதைகளின் மூலம் நமக்கு அறிவித்து நம்மை ஆச்சரிய படுத்துவார்களே
தவிர நாம் அறிந்துகொள்ள வேண்டியவைகளை அவர்களால் கூறிவிட முடியாது.
பொதுவாக, தேவதை-
வித்தைகளுள் சிலவற்றில் பயிற்சியை பெறுவதற்கு நேர்மையான முறைகளும், சிலவற்றில் கொடிய
பாபங்களுக்கு உள்ளாக வேண்டிய முறைகளும் கையாளப் பட்டு வருகின்றன. இந்த வித்தைகளைத்
தவிர, ஏவல் என்ற வித்தையை [பில்லி, சூனியம்] செயலாற்றுபவர்கள் மேலும் கொடிய பாபத்திற்குள்ளாக
வேண்டியவர்களாவர்.
நிற்க. தெய்வீக
மோசடிகாரர்களுள் ஒரு வகையினரை கீழே கொடுக்கிறேன். இந்த வகையினர்கள் தங்களை முருகன்
உபாஸகர்களென்றும், ஆஞ்சனேய உபாஸகர்களென்றும் விளம்பரபடுத்தி கொள்வதுண்டு. நாம் இவர்களை
அனுகினால், ஒர் புஷ்பம், பழம், நம்பர் போன்றவைகளுள் எதையாவது ஒன்றை காகிதத்தில் எழுதி
மறைத்து வைத்து கொள்ள சொல்வார்கள். பிறகு தெய்வத்துடன் கலந்து கொள்வதை போல் பாவனை காட்டி
விட்டு நாம் எழுதி வைத்திருப்பதை கூறி விடுவார்கள். சிலர் நெருப்பில் கையை விட்டு மாயா
ஜாலம் காண்பிப்பார்கள்; ஆனால் அத்தகையவர்களுடைய கையை நாம் பிடித்து நம்முடைய வீட்டில்
இருக்கும் நெருப்பில் அமுக்கினால் அந்த கை வெந்து பொசுங்கிவிடும். நிற்க
நமது கையில் மூடி
வைத்திருக்கும் பொருளை மறைந்து போய் விடும்படி செய்து காட்டுவார்கள். நம்முடைய பெயரையும்
குறிப்பிட்டு நாம் வந்திருக்கும் காரணத்தையும் சிலர் சொல்வதுண்டு. இத்தகையவைகளை போன்ற
பல அதிசயங்களை கண்டு நாம் ப்ரமிப்புடன் அவர்களிடம் வசபட்டுவிடுவோம்
ரூபாய் நோட்டுகளை
பன்மடங்காக பெருக்கி காட்டும் ஓர் மோசடி வகை உண்டு. மருந்து எடுத்தல் என்று கூறிக்கொள்ளும்
சில மோசடி மந்திரவாதிகளும் சில காலமாக தோன்றி இருக்கிறார்கள். தவிர காதுகளில் இருந்து
அழுக்கை [குரும்பை] எடுக்கும் நிபுணர்களும் சென்ற பல ஆண்டுகளாக ஜீவனத்தை நடத்தி வந்தார்கள்.
தற்போது குறைந்து விட்டது. ஒர் மிளகு அளவு தேங்க முடியாத ஓர் காதிலிருந்து ஒர் எலுமிச்சங்காய்
அளவுக்கு கூட இவர்கள் எடுத்து காட்டுவார்கள். இதேவிதமாக ஒர் மெஜிஷியன் ஜலத்தை தனது
வாயிலிருந்து நீர்வீழ்ச்சி போல் கொட்டி காண்பிக்கலாம்.
பொதுவாக ஏமாற்று
ஜீவன்களை நடத்திவரும் சிலர். நாம் சந்தேகப்படக்கூடிய நபர்களின் அங்க அடையாளங்களை கூறுவதுண்டு.
மற்றும் சிலரோ, எந்த பிரச்னையின் பொருட்டு வந்திருக்கிறோம் என்பதையும் பொதுபடையாக சொல்லி
விடுவதுண்டு. சில மந்திர வாதிகள் வெற்றிலையில் மையிட்டு சிறுபெண்களின் உதவியால் நபர்களின்
அடையாளங்களை முற்றிலும் புரியாத வகையில் கூறவைப்பதுண்டு. ஆனால் நாம் எவர்களை நம்முடைய
எதிரிகளாக நினைக்கிறோமோ அவர்களைத்தான் அந்த தேவதைகளால் குறிப்பிடமுடியுமே தவிர உண்மையான
குற்றவாளிகளை கூறிவிட முடியாது. எனவே இக்காலத்தில் மந்திரவாதிகளை அணுகினால் “பாவம்
அல்லது பண்டம் ஓர் இடம்; பழி ஒர் இடம்” என்ற ஒர் நிலைமையை ஏற்க நேரிடும்.
இவைகள் ஒருபுறம்
இருக்க, புஷ்பங்கள் முற்றிலும் பறிக்கப்பட்டு விட்ட ஒர் பூச்செடியிலிருந்து மீண்டும்
புஷ்பங்களை பறிப்பதை போல ஓர்மந்திரவாதி காட்டலாம். புனித போலிகள் இத்தகைய முறையை பயன்படுத்துவதுண்டு.
இதே விதமாக ஒர் வீடு முழுவதும் அத்தர் வாசனை கமகமவென்று மணக்கும்படியாகவும் செய்யலாம்.
அத்தர் கைவசத்தில் இருந்தால் தான் தேவதையின் மூலம் எந்த இடத்திலும் வீசவைக்கலாம்.
தவிர, மந்திரவாதிகள்
மற்றொரு உபாயத்தையும் பயன்படுத்தி வருகிறார்கள். குடும்ப கஷ்டங்களுக்கு அணுகுபவர்களிடம்
நிவர்த்தியாளர்கள் உங்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டியதன் பொருட்டு ஒர் மந்திரவாதியின்
மூலமாக தயாரிக்கபட்ட சில வஸ்துக்களை உங்கள் வீட்டின் கொள்ளை புறத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள்.
அதை பூஜை செய்து எடுத்தால் தான் உங்கள் கஷ்டம் நிவர்த்தி ஆகும். என்பான். வேண்டிய பணத்தை
பெற்று கொண்டு வீட்டாரின் கண்ணெதிரிலேயே அவர்களின் வீட்டு தோட்டத்தில் குழிவெட்டி அதில்
இருந்து ஒரு கத்தை மயிர் கொத்து, எலும்பு துண்டுகள், வதங்கி உலர்ந்த எலுமிச்சம் பழம்,
சாம்பல், கரித்துண்டுகள் இவைகளை எடுத்து காண்பிப்பான்.
இவைகளை கண்டதும்
வீட்டுகாரர்கள் இவன் கூறியதை அப்படியே நம்பி விடுவார்கள். ஆனால் அந்த மயிர் கத்தைகள்
அந்த இடத்தில் புதைக்க பட்டிருந்தனவா என்பதே தற்போதைய பிரச்சினை ஆகும். அவைகள் அந்த
இடத்தில் புதைக்க பட்டவைகள் அல்ல. அவைகள் குழி தோண்டும் போது அற்ப தேவதையினால் அவனுடைய
கையில் கொண்டு சேர்க்கபடுபவைகள் ஆகும். அதாவது அந்த வித்தையை பயின்றவர்கள் அதற்குறிய
தேவதையை ஸ்மரித்தால் அந்த தேவதை தாங்கள் கோரும் பொருள்களை ஒரேநொடியில் அவர்கள் இருக்கும்
இடத்தில் கொண்டு சேர்த்துவிடும். ஆனால் அந்த பொருள்களை முன்பே தயாரித்து வீட்டில் வைத்திருக்க
வேண்டும். மாஜிக் வித்தையை மோசடி வித்தைக்கு பயன்படுத்தும் அக்கிரமங்களில் இதுவும்
ஒன்று.
இவைகளை தவிர உயர்ந்த
பயிற்சியை பெற்றவர்கள் வேறு சில சாதனைகளை செய்து காட்டலாம். அதாவது தங்களை தெய்வீகம்
பொருந்தியவர்களாக நம்பி வரும் பக்தர்களின் வீட்டில் தொங்க விட பட்டிருக்கும் தங்களது
படங்களில் விபூதியையோ, குங்குமத்தையோ மற்றைய சில வற்றையோ படிய வைத்து காண்பிக்கலாம்.
தவிர தன்னிடத்தில் அசைக்க முடியாத தெய்வீக நம்பிக்கையை வைத்திருக்கும் சில குடும்பங்களில்
எவராவது ஒருவருக்கு நினைவற்று போகும்படியான ஓர் நிலைமையை ஏற்படுத்தலாம். தங்கள் குருவை
நினைத்து பிரார்தித்தவுடன் சுயநினைவை அடைந்து விடுவான். இத்தகைய நினைவற்ற நோயை ஒரு
குறிபிட்ட நேரம் வரையில் தான் இயங்க வைக்க முடியும். அதற்கு பிறகு தானாகவே நீங்கி விடும்.
இத்தகைய உயர்ந்த வேலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இவைகளின் மூலமாகவும் விளம்பரமாவதும்
உண்டு. சற்று கடுமையான தேவதைகளால் இவைகள் செயலாற்ற படுபவைகள் ஆகும்.
இயற்கை வஸ்யத்திற்கு நேர்மாறான பாப வஸ்சியத்தை அவசியம் தெரிந்து கொள்ள
வேண்டும். தாகாத முறையில் தயாரிக்கபட்டு வரும் ஒர் மையின் மூலம் சில பாதகர்கள் மக்களை
வஸியப்படுத்தி ஹானி விளைவித்து வருகின்றனர். இவர்கள் பிச்சை காரர்கள் போலவும், குடு,குடுப்
பாண்டிகளை போலவும், யாசகம் கேட்பவர்களை போலவும், விபூதி கொடுப்பவர்களை போலவும் உங்கள்
வீடுகளில் நுழையலாம். இத்தகையவர்களிடத்தில் நீங்கள் இரக்கம் காட்ட முற்பட்டு விட்டாலும்
அல்லது அவர்களின் மூலம் நமக்கு நன்மை ஏற்படலாம் என்று நினைத்து விட்டாலும் அல்லது அவர்களுடைய
ப்ரியமான கபட பேச்சுகளினால் நீங்கள் அன்பை ஏற்று விட்டாலும். அவர்களால் உங்களை வஸ்யமாக்கிவிட
முடியும். நீங்கள் வஸ்யமாகி விட்டால் உங்களுடைய ஸ்வய புத்தியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள்.
எனவே அத்தகயவர்கள் உங்களை பல விதங்களில் பயன்படுத்தி கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
இதன் மூலம் அவர்கள் இஷ்டத்துக்கு உங்கள் வீட்டில் உள்ள பொருள்களை கொடுத்து விட நேரிட்டு
விடும். இதே போல் பயணிகளிடம் அன்பை பெற்று
பெட்டிகளை தன் வசமாக்கி கொள்ளலாம். ஆனால் அத்தகைய ஒர் பாதகனை கைபிடியாக பிடித்து கொண்டு
விட்டால் அவனால் நம்மை ஏதும் செய்துவிட முடியாது.
நாமும் முன்பின்
தெரியாதவர்களிடம் ஜாக்கிரதையை கையாள வேண்டும்.
தீய வித்தைகளை
பற்றி கூறினேன் அல்லவா, அவைகளில் 56 வகை தேவதைகள் இயங்கி வருகின்றன. இவைகளை பற்றி சாஸ்திரத்தில்
கூறப்பட்டிருப்பதை சுருக்கமாக ஒருவர் தெளிவுபடுத்தி இருக்கிறார். “Speaking of
evil spirits from jaimini sutras [vedanga] Suryanarayana Rao observes in his
book. “There are about 56 varieties of evil spirits mentioned in the
Mantrasastras. There are two principal divisions among the Mantras. Kshudra
devoted to the invocation of evil spirts and actions performed by them and Maha
Mantras or incantations to Divine and Angelic Spirits and work that can be done
by them…..A few names of the evil Spirts: Bhuta, Preta, Pisacha, Sakini,
Dakini, Mohini, Jalini, Malini Bhethala, etc. The Maha Mantras invoke Gayatri,
Ganapathi, Surya, Skanda, etc.” M.P. Pandit.
ஸமீப காலங்களில்
கூட பவித்ரமான தெவீக தூய்மையை பெற்றிருந்த சிலர் தெய்வங்களையும் அம்பிகைகளையும் [மஹா
மந்திரங்களை] உபாஸித்து வந்தனர். தீய மந்திரங்களினால் பாதிக்க பட்டவர்களை இத்தகைய பெரியோர்களால்
தான் நிவர்த்திக்க முடியும். ஆனால் இக்காலத்தில் அத்தகைய பெரியோர்களின் காலம் மறைந்து
விட்டது.
மேஜிக் வித்தை
என்ற கலையில் சிறந்து விளங்குபவர்களுள் பாக்யநாதன் என்ற மெஜீஷியனும் ஒருவராவார். அத்தகையவரின்
ஒர் சொற்பொழிவின் ஸாராம்ஸம்
கழைக்கூத்தாடி செய்தால் கண்கட்டி வித்தை
சாமியார் செய்தால் அற்புதமா?
நமது மக்களிடையே
பரவி நிற்கும் குணம் ஒன்று பொதுவாக இருந்து வருகிறது. அதாவது சுத்த புரளிகளை நம்பி
அவர்களின் மீது குருட்டு நம்பிக்கை வைக்கும் குணமே அதுவாகும். அதனாலேயே போலி யோகிகளும்,
ஸாதுக்களும், வேஷதாரி பக்கிரிகளும் நிறைந்த நாடாயிருக்கிறது. நம் நாடு, “அமானுஷ்யமானது”
என்று தோன்றும் செயல்களாக இருக்கலாம், அவற்றை அப்யசித்தாலும், சில உபஸாதனைகளைக் கொண்டு
யாரும் செய்யக்கூடும் என்பதை என்னால் நிரூபிக்க முடியும்.
போலி யோகிகளும்,
வேஷதாரி ஸாதுக்களும் மேலும் பல விதமான ஏமாற்று வித்தைகளை செய்து காட்டுகிறார்கள். பழங்களையும்,
காய்கறிகளையும் பக்தர்களுக்கு வழங்கி அவைகளை நறுக்கி பார்க்க சொல்லுகிறார்கள். அவைகளுள்
சிலவற்றில் சினஞ்சிறு விக்ரகங்களும், சிலவற்றில் கரிதுண்டுகளும், இரும்பு துண்டங்களும்,
குப்பையும் காணபடுகின்றன. இவைகளைப் பொறுத்து அவரவர்களுடைய பலாபலன்களை எடுத்து கூறிவருகிறார்கள்
இந்த தெய்வீக போலிகள்.
காற்றிலிருந்து
விபூதி வரவழைத்து காட்டுகிறார் ஒருவர். எங்கிருந்தோ விக்ரஹங்களை வர வழைக்கிறார் மற்றொருவர்.
அமானுஷ்யமான தெய்வீக சக்தி தங்களுக்கு இருக்கிறதென்று மக்களை நம்ப வைக்கவே இவைகள் எல்லாம்.
யோகி என்றாலே மோசடி
செய்பவர் என்று நான் சொல்ல வரவில்லை. சொல்லவும் மாட்டேன். உண்மை யோகிகள் இருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று நிச்சயம். அவர்கள் தங்கள் யோக பலனை பணமாக்க மாட்டார்கள்.
ஸமீப ஆண்டுகளிலிருந்து
“அஷ்டாவதனம்” என்ற பெயரில் சிலர் தேவதைகளின் மூலம் அவரவர்களுக்கு கம்ப்யூட்டரை போல
விடை அளித்து வருகின்றனர். ஆனால் அஷ்டாவதனம் என்பது வேறு விதமான கலையாகும்.
மனிதனுக்கு ‘நான்’
‘எனது’ என்ற அகங்காரம் மேலிட்டிருப்பது ஸகஜம். அதை அடக்கி அறவே ஒழிக்க எவ்வளவு கர்மாக்கள்
செய்யவேண்டும்! எத்தனை ஆண்டுகள் தபஸில் இருக்க வேண்டும்! உண்மையான யோகி தம் யோகசக்தியை
பற்றி பேசுவதே இல்லை. அப்படி எவராவது பேசினால் ஏதோ மோசடி நடக்க இருக்கிறது என்பது திண்ணம்.
நன்றி
திரு. ஸ்ரீ சிவன் ஸ்வாமிகள்
ஏணிப்படிகளில் மாந்தர்கள்
புத்தக வெளியீடு - நர்மதா பதிப்பகம், சென்னை
பதிவாக்கம் - S.V.ராஜ ரத்தினம். கரூர்.