28 ஜனவரி, 2013

எங்கே கடவுள்?....மதத்திலா....இயற்கையிலா...



 இது கடவுள் தேடல் உள்ளவர்களுக்காக. அவர்களுக்கு தேவையான விளக்கங்கள் இதில் கிடைத்தாலும் கிடைக்கலாம்.  கேள்வி, பதில் பாணியில் கொடுக்க  பட்டுள்ளது. பல ஆண்டுகளாக எனக்கு விடை தெரியாமல் பலரிடம் நான் கேட்ட கேள்விகளுக்கு  தற்பொழுது அதன் விடைகளை உணர்ந்ததால்.எழுத பட்டதே இது.



 கடவுள் தேடல் உள்ளவர் :  கடவுள் இருக்கிறார்  என்றால்  கடவுளை காட்ட முடியுமா?... ....நான் பார்க்க வேண்டும்........ எங்கே இருக்கிறார்........ சொல்லுங்கள்..................


 ஆன்மீக  வாதி :  காற்றிலிருந்து புயல் உருவாகிறது. கடலில் இருந்து  சுனாமி உருவாகிறது. இப்பொழுது காற்றும் இருக்கிறது. கடலும் இருக்கிறது. நான் புயலை   பார்க்க வேண்டும். சுனாமியை பார்க்க வேண்டும். இப்பொழுது காட்டு என்று கேட்டால் உங்களால் காட்ட முடியுமா?...... முடியாது....... நீங்கள் வர சொன்னாலும், உங்களுக்காக வர வேண்டும் என்ற அவசியம் அவைகளுக்கு இல்லை. அது போல் தான் கடவுளும்.



கடவுள் தேடல் உள்ளவர் :   கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றால்....... உயிர்களுக்கு ஏன் இவ்வளவு பிரச்சனைகள்....... அனைவரையும் சந்தோசமாக வைத்திருக்கலாமே...... வாழ்கையே ஒரு போராட்டமாக இருப்பது ஏன்? 

ஆன்மீக   வாதி : கடவுள் உயிர்களுக்கு வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் படைத்திருக்கிறார். உதாரணத்திற்கு ஒன்று சொல்வதென்றால், குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அந்த குழந்தைக்கு உணவாக பால் கொடுக்க அந்த தாய்க்கு மார்பகத்தை படைத்திருக்கிறார். வாழ்க்கை போராட்டமாக இருப்பதற்கு உண்டான காரணத்தை புத்தர் சொல்லியிருக்கிறார். ஆசை என்று.....ஆசையே அனைத்து துக்கங்களுக்கும் காரணம் என்று.



கடவுள் தேடல் உள்ளவர் :  ஏன் இத்தனை மதங்கள்....... ஒரு மதம் இன்னொரு மதத்தினருக்கு பிடிப்பதில்லை. அனைத்தும் கடவுள் தானே. கோவில் என்பதும், மசூதி என்பதும், சர்ச் என்பதும் ஒன்று தானே....... ஒரு மதம் கல்லை கடவுள் என்பதும், இன்னொரு மதம் அதை முட்டாள் தனம் என்று வெறுப்பதும் ஏன்?...... கடவுள் இல்லை என்பதன் ஒரு பகுதி தானே இதுவும்....

ஆன்மீக   வாதி :  மனிதர்களில் ஆண்கள் - வேஷ்டி, பேன்ட், அரைக்கால் சட்டை, சட்டை, கோட், டி சர்ட், என்று அணிகிறார்கள். பெண்கள் - சேலை,  சுடிதார், மிடி என்று அணிகிறார்கள். ஆண்கள் பெண்கள் அணியக் கூடியதையோ.....பெண்கள் ஆண்கள் அணியக் கூடியதையோ.......... விரும்புவதில்லை...... ஆண், பெண் உடலமைப்பு வேறு அதனால் அப்படி என்று வைத்துக் கொண்டாலும், வெளி நாட்டினர் கோட், சூட் போடும் ஆண்கள் வேஷ்டியோ......மிடி அணியும் வெளி நாட்டு பெண்கள் சேலையையோ...... விரும்பு வார்களா?....விரும்ப மாட்டார்கள். அது போல் தான் இதுவும். 

அனைவருக்கும் பொதுவான கருத்து. உடலை மறைக்க ஆடை வேண்டும். என்பது தான். வெவ்வேறு கடவுளை கும்பிட்டாலும் கருத்து கடவுள் உண்டு என்பதுத் தானே தவிர. கடவுள் இல்லை என்பதின் ஒரு பகுதி கிடையாது.



கடவுள் தேடல் உள்ளவர் :  கடவுள் தான் அனைத்தையும் படைத்தவர் என்கிறீர்கள். அவருக்கு எதற்கு தேங்காய்.... பழம்.... பொங்கல்.... கொழுக்கட்டை.... பால் அபிஷேகம், நெய் அபிஷேகம்.......

ஆன்மீக   வாதி :  உறவினர் வீட்டிற்கு செல்லும் போது தின் பண்டங்கள் வாங்கி செல்கிறோம். ஏன்?....... அவர்களால் அதை காசு கொடுத்து வாங்க முடியாது என்பதற்காகவா?....... அன்பு.....வெறும் கையோடு போக கூடாது என்று அவர்களின் மீது வைத்துள்ள பாசம்.......அது போல் தான் கடவுளுக்கு சமர்பிக்கும் பொருள்களும்.



கடவுள் தேடல் உள்ளவர் :  கடவுளுக்கு என்று சொல்லிக் கொண்டு......... ஆட்டையும், கோழியையும் , மற்ற விலங்குகளையும் பலி கொடுப்பதும். வேண்டுதல் என்ற பெயரில் மொட்டை அடிப்பதும் அக்கினி சட்டி எடுப்பதும், சாப்பிடாமல் விரதம் இருப்பதும், அக்கினி குண்டம் இறங்குவதும்......... இதெல்லாம் தேவைத்தானா?......

ஆன்மீக   வாதி :  அந்தந்த இடத்திற்கு உண்டான மக்களின் கலாசாரங்களை பொறுத்து அன்பால் செய்யப்படுவது. உயிர் பலி என்பது....... அவர்கள் சாப்பிடுவதற்கு எப்படியும் ஆட்டையோ, கோழியையோ கொல்ல தான் போகிறார்கள். இதில் கடவுளுக்காக, வேண்டுதலுக்காக என்பது அவர்களின் கடவுள் மீது உள்ள பக்தியையும், அன்பையுமே காட்டும்.



கடவுள் தேடல் உள்ளவர் :  ஊசியில் இருந்து கார், ஆகாய விமானம், சேட்டிலைட், டி. வி., கம்யூட்டர்  என்று அனைத்தையும் மனிதன் தன் அறிவால் கண்டு பிடித்தான். எங்களின் கடவுளே உண்மையான கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் அந்த கடவுள் இதில் எதையாவது கண்டு பிடித்து கொடுத்திருக்கிறாரா?.............

ஆன்மீக   வாதி :  உயிர்கள் தொடர்ந்து இன பெருக்கம் செய்து கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் உயிர் இனங்கள் அழியக்கூடாது என்பது மட்டுமே கடவுளின் கொள்கையாக இருக்கலாம். மனிதனின் வசதிக்காக  வேகமாக செல்ல காரும், வெயில் காலத்தில்,  தான் தங்கும் இடம் மட்டும் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு ஏர் கன்டிசன் மிஷினும்........... கடவுள் ஏன் கண்டு பிடித்து தர வேண்டும்.



கடவுள் தேடல் உள்ளவர் : மதத்திற்குள்ளேயே  மேல் ஜாதி, கீழ் ஜாதி  என்று பிரித்து, கீழ்ஜாதி காரர்களை கீழ்த்தரமாக நடத்திக் கொண்டு, ஜாதி சண்டைகளை உருவாக்குவது மதம் தானே?

ஆன்மீக  வாதி : சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை எல்லா நாடுகளிலும் மனித அடிமைகள் இருந்தார்கள். ஆண், பெண் அடிமைகளை சந்தையில் வாங்கவும், விற்கவும் முடியும். ஜாதிகள்  என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கிறது. அதுவும் தொழிலை வைத்து ஏற்படுத்த பட்டிருக்கிறது. அப்போது என்ன சூழ்நிலை என்பது தெரிய வில்லை. கல்வி அறிவும், பொருளாதாரமும் உயரும் போது ஜாதிகள் இருந்தாலும் அதன் ஏற்ற தாழ்வுகள்  அழிக்கப்பட்டு விடும்.



கடவுள் தேடல் உள்ளவர் :  ஜாதகம், ஜோதிடம், நியுமரலாஜி, குறி சொல்வது என்பது ஏமாற்று வேலைத்தானே. எந்த கடவுள் இதை சொன்னார்.......... யாரோ சொன்னார்கள். பழைய ஓலை சுவடியில் உள்ளது. என்று......... ஏன் ஏமாற்ற வேண்டும்.

ஆன்மீக  வாதி : ஜோதிடம் பார்த்தவர்கள் தான் திரும்ப, திரும்ப பார்கிறார்கள். இதில் எதுவும் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கல்யாணம் என்று வரும் பொழுது ஜோதிட பொருத்தம் பார்க்காமல் இருப்பதில்லை. ஒரு ஜோதிடர் சொல்வது சரியாக இருக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லித் தான் நாம் போய் பார்க்கிறோம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை தவிர்த்து விடுங்கள். யாரும் கட்டாய படுத்த போவதில்லை. நமக்கு தெரியாத....... பல ஆயிரம் விஷயங்கள்..........இந்த உலகில் இருக்கின்றன.



கடவுள் தேடல் உள்ளவர் :  சடங்குகள், சம்பிரதாயங்கள்  எத்தனை மூட பழக்க வழக்கங்கள்......... எந்த காரியத்தை செய்தாலும் இப்படித்தான் செய்ய வேண்டும் அப்படித்தான் செய்ய வேண்டும்  ஒரு மனுஷனுக்கு பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை  எத்தனை சடங்குகள்.   இது தேவை தானா?......

ஆன்மீக  வாதி : சடங்குகள்....... சம்பிரதாயங்கள் ...........  முதல் குழந்தை பிறப்பு தாய் வீட்டார் கவனிப்பது என்றும்  கர்ப்பஸ்திரிகளுக்கு வளை காப்பு,  குழந்தைக்கு மொட்டை அடிப்பது, காது குத்துவது என்பதும் திருமணம் என்றால் பெண் வீட்டார் மாப்பிள்ளை  வீட்டை பார்க்க செல்வது என்றும் திருமணத்திலேயே பல சம்பிரதாயங்கள். பிறப்பு முதல் இறப்பது வரையிலான..... சடங்குகள், சம்பிரதாயங்கள்.
           
 இது தான் சமூக அமைப்பு.........  இந்த சமூக அமைப்புத்தான் உங்களுக்கு வாழ உதவுகிறது. வழி காட்டுகிறது. வாழ்கை நெறியை உருவாக்குகிறது...... பல சமூக அமைப்புகள் ஒன்றாக சேர்ந்ததுத் தான் இந்து மதம்......... இந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் ஒரு சமூக அமைப்பு என்பதால் உங்கள் வாழ்கையில் ஒரு கட்டு கோப்பையும், உதவிகளையும், குடும்பம் இயல்பாக வாழ தெளிவான வழிகளும் கிடைக்க உதவுகிறது. ஆகவே அதை கடை பிடிப்பதில் தவறில்லை.



கடவுள் தேடல் உள்ளவர் : எனக்கு கடவுளை பற்றிய குழப்பம் அதிகமாக இருக்கிறது. இந்து மதத்தை தவிர மற்ற மதங்கள் ஒரே கடவுள் கொள்கையும், ஒரே மாதிரியான தத்துவங்களும், சடங்குகளும் இருக்கின்றன. எளிதாக புரிகிறது.

 இந்து மதத்தில் பல கடவுள்கள்.  பல வேறுபட்ட தத்துவங்கள் இருக்கின்றன. புராணங்களை படித்தாலும் அதை நம்ப முடியாதவைகளாக, சில கேலிக்குரியதாக கூட இருக்கிறது.

 சில தெய்வங்களை வீட்டில் வைத்து கும்பிடக்கூடாது, கோவிலில் வைத்து மட்டுமே கும்பிடுவது என்று சொல்கிறார்கள். சில நேரங்களில் சில கடவுள்களை கும்பிடலாமா, கும்பிடக்கூடாதா........ என்ற சந்தேகத்துடனே மனம் ஒன்றாமலேயே கும்பிட வேண்டியது இருக்கிறது.

இந்து மதத்திலேயே மாமிசம் சாப்பிடுபவர்கள் ஒரு பிரிவு...... சாப்பிடாதவர்கள்  ஒரு பிரிவு........ நெற்றியிலே பட்டை போடுபவர்கள்...... நாமம் போடுபவர்கள்........ சில கோவில்களில் சட்டை போடாதவர்கள் மட்டுமே அனுமதி என்பதும். ஒரே விதமான நிகழ்ச்சிக்கு வெவ்வேறான சடங்கு முறைகளும்..........ஒவ்வொரு கடவுளுக்கும் நம்ப முடியாத....... ஒவ்வொரு கதைகளும்.

 இந்து மதமே..... எனக்கு புரியவில்லை. இருந்தாலும் கடவுளை கும்பிடுவதால் மன அமைதி,  திருப்தி, ஏதோ ஓர் உணர்வு கிடைக்கிறது. அது என்ன வென்று சொல்ல தெரிய வில்லை. பல ஆன்மீக புத்தகங்களை தேடி, தேடி படித்தாலும் மேலும், மேலும் குழப்பமே வருகிறது........ இதற்கு காரணம் கூற முடியுமா?......

ஆன்மீக வாதி :  மதத்தையும், கடவுளையும் ஒன்றாக சேர்த்தே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் இன்னொரு விதமாக சிந்திப்போம். கடவுளையும்........மதத்தையும்..........தனித் தனியாக பிரித்து பார்ப்போம்.

 கடவுள் -   கடவுள் என்பவர் உலகில் உள்ள அனைத்தையும் உருவாக்கியவர், இயக்குபவர், காப்பவர், அழிப்பவர் என்றும் அன்பு, கருணை, உதவுபவர், தீய சக்திகளை அழிப்பவர், நற்பண்புகளை உடையவர். என்ற உருவகம் தான் அனைத்து கடவுளுக்கும் இருக்கிறது.

 நம் உடலையே எடுத்துக் கொள்வோம்....... நம் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நாம் நினைத்தபடி நடப்பதில்லை........ நம் இதய துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்தி...... மீண்டும் ஓட வைக்க நம்மால் முடியாது...... நம் உடலில் பல செயல்கள் நாம் நினைப்பதாலோ , நம் கட்டளைபடியோ.......செய்து கொண்டிருக்கவில்லை. அப்படி யென்றால்.... நம் உடலை ஏதோ ஒரு சக்தி நிர்வகிக்கிறது  என்றுத் தான் அர்த்தம்.

 நம் உடலுக்கு வெளியில் பார்த்தாலும்......... நம் மனித சக்திக்கு அப்பாற்பட்ட பல நிகழ்வுகளை பார்க்கிறோம்...... சூரியன் இன்று கிழக்கிலும் நாளை மேற்கிலோ, வடக்கிலோ, தெற்கிலோ உதிப்பதில்லை...... மழைபொழியும் போது பொத்தென்று மொத்தமாக விழுவதில்லை........ பூமி சூரியனை சுற்றுகிறது என்றால் நாம் கார் ஓட்டுவதை போல சில நேரங்களில் மெதுவாகவும் சில நேரங்களில் வேகமாகவும் சுற்றுவது இல்லை........ அனைத்து செயல்களும் ஏதோ ஒரு சக்தியால் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது....... ஏதோ ஒரு சக்தியால் நிர்வகிக்கப் படுகிறது....... என்பதை நாம் உணர முடிகிறது.

 அந்த சக்திக்கு உண்டான உருவகம்  தான் கடவுள்....... மற்ற மதங்களில் அனைத்தையும் செயல் படுத்துவது..... ஒரு கடவுள் தத்துவம் என்றால். இந்து மதத்தில்...... பல கடவுள் தத்துவம்....... ஒவ்வொரு காரியங்களும் செயல் படுத்த தனித்தனி கடவுளும் அவர்களுக்கு துணை புரிய பல தேவர்களும், தேவதைகளும்........ நம் முன்னோர்களின் ஆன்மீக தேடலில் வழி, வழியாக ஏதோ ஒரு வகையில் அருளி சென்றது தான்........ இந்த கடவுளும்......... தெய்வங்களும்.

 நமக்கு மேல் உள்ள அந்த சக்தியிடம், கடவுளிடம், தெய்வத்திடம் நம் குறைகளை முறையிடுவதலோ......... வணங்குவதாலோ........ நமக்கு தீய எண்ணங்கள் வராமல் நல்ல சிந்தனைகள் உருவாகிறது. கடவுளை வணங்குவதால்........ நமக்கு என்ன நஷ்டம். ஆகவே வணங்குவது தவறில்லை.

 மதம் : சடங்கு, சம்பிரதாயங்கள் கொண்டது சமூக அமைப்பு....... இந்த சமூக அமைப்புகள் தெய்வங்களை மூல ஆதாரமாக கொண்டிருக்கின்றன.

 பல சமூக அமைப்புகளை கொண்டது இந்து மதம். அனைத்து மதங்களும் கடவுளை மூல ஆதாரமாக கொண்டிருக்கின்றன.

       இந்து மதத்தை தவிர மற்ற மதங்கள்....... ஒரு சமூக அமைப்பை மட்டுமே கொண்டதாக இருக்கலாம். பின் மற்றவர்கள் அந்த மதத்தில் சேர்ந்தாலும். அந்த அமைப்பின் சாராம்ச படிதான்   நடந்து கொள்ள முடியும்.

       இந்து மதம் அப்படி அல்ல..... பல சமூக அமைப்புகள் சேர்ந்தே இந்து மதம் உருவாகி இருக்கிறது. ஆகவே தான் பல கடவுள்கள், பல விதமான சடங்கு சம்பிரதாயங்கள்

 உடை அணிவதில் இருந்து,  பொட்டு வைத்து கொள்வது, பூ வைத்து கொள்வது, ஒவ்வொருவரையும் உறவு முறை வைத்து அழைப்பது எப்படி என்றும். எந்த உறவு முறைக்காரர்களை திருமணம் செய்வது. குடும்பத்தில் ஆண்களின்  கடமை என்ன, பெண்களின் கடமை என்ன என்று ஒவ்வொன்றுக்கும்........ சமூக அமைப்புகள் வழி வகுத்து இருக்கிறது.

 சிறு வயது முதலே இந்த சமூக அமைப்புகளின் படி நாம் வாழ்ந்து பழக்க பட்டிருக்கிறோம். அது படியே வாழ்வது தான் இயல்பான வாழ்க்கையாக இருக்கும்.

இந்த சமூக அமைப்புகள் தான், உங்களை நெறி படுத்துகிறது. வாழ உதவுகிறது. வழி காட்டுகிறது. பாதுகாப்பை தருகிறது.

 மூல காரணங்களும், புராண கதைகளும் நம்பக தன்மை இல்லை என்று நாம்  எப்படி சொல்ல முடியும்...... நமக்கு அது தேவையும் இல்லை. இந்த சமூக அமைப்பில் உள்ள விசயங்கள் அனைத்தும்  செதுக்க பட்டு கொண்டு தான் இருக்கின்றன. தேவை இல்லாத விசயங்கள் கால ஓட்ட செதுக்கத்தில் தானாகவே உதிர்ந்து விடும்.

       
நாம் வாழும் காலம் மிகவும் குறைவே. மனிதன் கால ஓட்டத்தில்  பல சுமைகளை சுமந்து கொண்டு மூச்சு வாங்க ஓடி முடித்து ஆசுவாசபடும் போது தான் பின்னால் திரும்பி பார்த்து இதற்க்கெல்லாம் காரணம் என்ன என்ற ஆன்மீக சிந்தனை எழுகிறது. உள்ளது உள்ளபடி காண தொடங்கும் சமயத்தில் அவனின் வயோதிகத்தின்  காரணமாக அவன் காலம் முடிகிறது.

 இப்பிரபஞ்சத்தை பற்றியும், இயற்கையின் போக்கை பற்றியும் ஆராய்ந்து, தெளிந்து, அறிந்து நம்  முன்னோர்கள்  தெளிவு படுத்தி  கொடுத்ததே கடவுளும், மதங்களும்.

 அதனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் போது சிரமம் இல்லாமல், வாழ்க்கையை இயல்பாக வாழலாமே........

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் " பிறரது நெறியைப் பின்பற்றுவதை விட உங்கள் நெறியையே பின்பற்றி உயிர் விட்டாலும் அது சிறப்பு  ( 3 . 35 )" என்று சொல்கிறார்.

                        ***************************************************

   
 ஆக்கம் :

           S.V. ராஜ ரத்தினம், செங்குந்தபுரம், கரூர்.-  9443425240





                                                        
       
: