8 டிசம்பர், 2013

காஞ்சிபுர பட்டு, அஸ்சாமின் முகா பட்டு, கோசா சில்க் - நூல் உருவாகும் விதம்



                                                                             
                                                 
காஞ்சிபுரம் பட்டு

பட்டுப் புழுவின் கூடு ஒரே நூலால் உருவாக்கப் பட்டவை. ஒரு கூட்டில் 500 முதல் 1000 மீட்டர் நீளம் வரை பட்டு இழை இருக்கும். பட்டுப்புழு கூடு கட்டிய பத்து நாட்களுக்குள் கூட்டிலிருந்த நூலை பிரித்தெடுக்க வேண்டும். பத்து நாட்களுக்கு பிறகு பட்டுக் கூட்டின் உள்ளே இருக்கும் கூட்டுப் புழுவானது உருமாற்றம் அடைந்து அந்துப் பூச்சியாக கூட்டை உடைத்துக் கொண்டு வெளியேறும். இதனால் பட்டு இழை ஒரே நூலாக பிரித்தெடுக்க இயலாமல் போகும்.

Silkworm post cocoon

பட்டு நூலை பிரித்தெடுக்க பட்டுக்கூடுகளை சுடுநீரில் அமுக்கி வேக வைக்க வேண்டும். இதனால் பட்டு இழைகளுக் கிடையேயான பிசின் இளக்கமடைந்து பட்டு இழைகளை பிரித்தெடுக்க ஏதுவாகும். இவ்வாறு பிரித்தெடுப்பதற்கு நாட்டு சர்க்கார் முதல் முழுமையான தானியங்கி இயந்திரம் வரை பல்வேறு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
பட்டு இழைகளை நூற்கும்போது தேவைக்கு ஏற்ப 6 முதல் 10 பட்டுக்கூடுகள் வரை ஒன்றிணைந்து நூலாக நூற்கப் படுகிறது. பின்னர் இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட நூலிழைகள் இரண்டை ஒன்றாக முறுக்கேற்றப்பட்டு பாவிற்கு நெசவில் பயன்படுத்தப் படுகிறது.

பாவு மற்றும் ஊடு நூலிழைகள் சோடாகாரம் மற்றும் சோப்புடன் சேர்த்து கொதிநீரில் முக்கி வெளுக்கப்படுகின்றன. பட்டுக்கூட்டின் நிறம் என்னவாக இருந்தாலும் அவை வெளுக்கப்பட்டே பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு வெளுக்கும் போது பட்டு நூழிலையின் வெளியே படிந்திருக்கும் செரிசின் எனப்படும் பசைப் பொருள் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பசைப்பொருள் நீக்கப்பட்டு வெளுத்த இழைகள் சாயம் தோய்கப்பட்டு பட்டு நூலிழைகள் தயாராகின்றன.

Post cocoon

இவ்வாறு பசைப்பொருள் நீக்கப்பட்டு வெளுத்த நூலிழைகள் சாயம் தோய்கபட்டு தறியில் நெசவு நெய்யப்படுகிறது. ஒரு பட்டுப் புடவைக்கான நூலைப்பெற சுமார் 4000 முதல் 5000 பட்டுக்கூடுகள் தேவைப்படும்.

பட்டுப்புடவைகளுக்கு தனிச் சிறப்பைத் தருவது சரிகை. மெல்லிய பட்டு நூலின் மீது வெள்ளி கம்பியை சுற்றி அதன் மீது தங்கம் பூசப்பட்டு சரிகை தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ சரிகையில் 7 முதல் 8 கிராம் வெள்ளி மற்றும் தங்கம் இருக்கும். ஒரு கிலோ சரிகையின் விலை சுமார் இருபதாயிரம் ரூபாயாகும். பெரும்பாலும் சரிகை குஜராத் மாநிலம் சூரத் நகரிலிருந்து வாங்கப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரத்திலும் சரிகை தயாரிக்கப்படுகிறது.

பட்டுப்புடவையின் கரை மற்றும் முந்தியிலுள்ள பலவகை வேலைப்பாடுகள் செய்ய சரிகை பயன்படுகிறது. சரிகையின் அளவைப் பொருத்தே பட்டுப்புடவையின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

பாரம்பரிய கலைஞர்களால், காஞ்சிபுரம், ஆரணி, காசி, பெர்காம்பூர், போச்சம்பள்ளி பகுதிகளில் பட்டு நெசவுத் துணி வகைகள் (புடவை, வேட்டி வகைகள்) கலையழகு மிக்கதாக இந்திய கலாச்சார சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய திருமண, மத சடங்குகளில் பட்டின் தேவை இன்றியமையாதது.

அறுவை சிகிச்சையில் தையலுக்குப் பயன்படுவது பட்டு இழைகளே.

பாராசூட் மற்றும் விண்வெளி ஓடங்களில் பட்டுக்கயிறுகள் பயன்படுகின்றன.

பட்டுக்கூடுகளிலிருந்து பிரித்தெடுக்கும் புரதம் மருந்துப் பொருளாகவும் ஊட்டப் பொருளாகவும் பயன்படுகிறது.

பல் வேறு வகை ஒப்பனைப் பொருட்களினால் பட்டுக்கூடு புரதம் சேர்க்கப்படுகிறது.

பட்டுப்புழு கூட்டுப்புழு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

பட்டுப்புழு வளர்ப்புக் கழிவுப்பொருட்கள் கால்நடைத் தீவனம் மக்கிய உரங்கள், மண்புழு உரம் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகின்றன.

பட்டுக்கூடு சுத்திகரிப்பு தொழிலில் கழிவுப் பொருட்களான கூட்டுப்புழுவின் மேலோடு கைட்டின், கைட்டோன் போன்ற மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன.

பலவகைப் பொருட்கள் தயாரிப்பில் மல்பெரி வேர், இலை ஆகியவை பயன்படுகின்றன.

அதிவேக சைக்கிள் பந்தயங்களில் பட்டு இழைகளைக் கொண்டு இரப்பர் சக்கரங்கள் தயாரிக்கப்படுகின்றன.



                   அஸ்சாமின் முகா பட்டு
                                                                    



அஸ்சாம் மக்களின் கௌரவக் குறியீடாகவும் விளங்குவது முகா என்ற பட்டு ரகம் தான் என்று சொன்னால் பலருக்கும் வியப்பாகத்தான் இருக்கும்.

தமிழ்நாட்டில் திருமணம், அதுவும் காஸ்ட்லி திருமணம் என்றால் யாரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையை விட்டுக் கொடுப்பதில்லை. அதுபோலத்தான் அஸ்ஸாம் முகா பட்டும். சர்வதேச சந்தையில் அஸ்சாமின் முகா பட்டுக்கு ஏக டிமாண்ட் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

தகதகவென ஜொலிக்கும் தங்க நிறம்தான் முகா பட்டுக்கான அடையாளம். முகா என்றால் மஞ்சள் நிறம் என்று பொருள். இந்தப் பட்டுப் புடவை முற்றிலும் தங்க நிறத்தில் ஜிகுஜிகுவென்று ஜொலிப்பதால்தான் இந்தப் பட்டுக்கு முகா என்று பெயர் வந்ததாம்.

நம்ம ஊர் பெண்கள் பட்டுப்புடவைகளை துவைப்பது என்பதே அரிது. ஏனென்றால், துவைத்தால் சாயம் போய்விடும். ஜரிகை புடவையில் இருந்து வந்துவிடும். துவைக்க துவைக்க பழைய பட்டுப்புடவை போன்று தோற்றமளிக்கும் என்று பயந்தே பல பெண்கள் பட்டுப் புடவைகளை துவைக்காமலும், அணிந்துகொள்ளாமலும் வாங்கிய பட்டுப் புடவைகளை அப்படியே பத்திரப்படுத்தியே அழகு பார்ப்பார்கள். ஆனால், இந்த மாதிரி சமாச்சாரங்களுக் கெல்லாம் அப்பாற்பட்டது தான் முகா. இந்தப் பட்டுப் புடவையை துவைக்க துவைக்க இதன் அழகு கூடும். அதேபோல எத்தனை முறை துவைத்து துவைத்து அணிகிறோமோ, அதற்குத் தகுந்தார்போல் புதுப் புடவை போன்று காட்சியளிக்குமாம்.

 பட்டு நூல்களுக்கெல்லாம் ராணி என்று புகழப்படும் முகா பட்டு, இந்தியாவின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில்தான் முதன்முதலில் அடையாளப்படுத்தப்பட்டது. அதற்குப்பிறகுதான் இந்த முகா பட்டு அஸ்ஸாமின் பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 200 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தாங்கத்தக்க இந்த பட்டு ரகம், 85 சதவீத புறஊதாக் கதிர்களை உறிஞ்சும் தன்மை கொண்டதாம். கோடைக்காலத்திற்கு மட்டுமல்லாமல், குளிர்காலத்திலும் இந்தப் பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால், சுகமாக இருக்கும் என்கிறார்கள் அஸ்ஸாம் வாசிகள்.

முகா பட்டுப் புடவையின் முதல் தரம் வெண்மை நிறத்தில் இருக்கும். வெண்மை நிற முகா பட்டுப் புடவைக்கு சர்வதேச பட்டு சந்தையில் எப்போதும் பெரும் வரவேற்பு உண்டு.

முகா பட்டு நூல் அன்ந்திரியா அஸ்ஸாமினிஸ் என்ற பட்டுப் புழுவிலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வகையான புழு அஸ்ஸாமில் மட்டும்தான் வாழ்வது குறிப்பிடதக்கது. இந்தப் புழுவின் முட்டைப் பருவத்திற்கு அடுத்தப் பருவத்தில் மட்டும் இரண்டு மி.மீ. அளவுக்கு பட்டு நூல் எடுக்க முடியுமாம். ஆனால், இதை சரியாக வளர்க்கும் பட்சத்தில் ஒரு பட்டுப் புழுவிடம் இருந்து மட்டும் 30 மி.மீ. நீளம் வரை பட்டு நூல் எடுக்கமுடியும். இந்த அத்தனை சமாசாரங்களும் நடப்பது வெறும் எட்டு நாட்கள்களில் என்றால் வியப்பாக இருக்கிறது தானே.

அது மட்டுமல்லாமல் 1000 பட்டுப் புழுவிலிருந்து 125 கிராம் பட்டு நூலை எடுக்க முடியுமாம். இதை வைத்துக்கொண்டு 750 கிராம் முதல் 1 கிலோ வரையிலான பட்டுப் புடவை தயாரிக்க முடியும் என்கிறார்கள், முகா பட்டு நெசவாளர்கள். அது மட்டுமல்லாமல் இந்தப் பட்டு நூலும் ஜூலை - ஆகஸ்ட், செப்டம்பர் - அக்டோபர் மற்றும் நவம்பர் - டிசம்பர் உள்ளிட்ட குறிப்பிட்ட மாதங்களில் மட்டும்தான் புழு உற்பத்தி செய்யும். இதில் முதல் இரண்டு மாதங்களில் கிடைக்கும் பட்டு நூல்தான் தரத்திலும் நிறத்திலும், உயர்ந்ததாக இருக்கும். இந்த நூலுக்குத்தான் உலக பட்டுச் சந்தையில் அதிக விலை. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முகா பட்டுப் புடவைக்கு எப்போதும் தனி மவுசுதான். ஜப்பான் நாட்டில் இப்போது வரை முகா பட்டு நூலை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் நெசவாளர்கள்.

உலக அளவில் பட்டுநூல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த உற்பத்தியில் 90 சதவீதம் அஸ்ஸாமில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இந்தியாவில் உற்பத்தியாகும் பட்டுநூல் மட்டும் 22 ஆயிரம் டன். இவ்வளவு உற்பத்தி செய்தும் நம் நாட்டில் பட்டு நூல் தேவை இருப்பதால், தற்போது சீனாவிடம் இருந்து 8ஆயிரம் டன் பட்டு நூல் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். சீனா மட்டுமல்லாமல், உஸ்பெகிஸ்தான், பிரேசில்,வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்தும் தற்போது பட்டுநூல் இறகக்குமதி செய்து கொண்டிருக்கிறோம். பட்டுவர்த்தகம் மூலம் மட்டும் இந்தியா கடந்த ஆண்டில் சம்பாதித்த வருமானம் ரூ.2,600 கோடி என்கிறார் முகா பட்டு நூல் உற்பத்தியாளர் திரு.மேனன் அவர்கள்.


சாதாரண மஞ்சள் நிற பட்டுத் துணி, இந்தியாவை சர்வதேச சந்தையில் கவுரவப்படுத்துகிறது என்றால், முகாவை நினைத்து பெருமைப்பட்டுத் தானே ஆக வேண்டும்!


                                                தேவாங்கரின்   கோசா சில்க்

சட்டீஸ்கர் தேவாங்கரின் கைத்தறியில் உருவாகும் கோசா சில்க்:-

சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழ்ந்து வரும் தேவாங்கர்களின் கைத்தறியில் உருவாகும் கோசா சில்க் சேலைகள் என்றாலே இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டிலும் பிரசித்தம் ஆகும்.

கோசா சில்க் என்று நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த ரகத்தை நெய்பவர்கள் குறிப்பாக சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் தேவாங்கர்கள்தான் என்ற செய்தி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். கோசா பட்டுச் சேலைகள் மட்டுமல்லாது சுடிதார், ஆண்களுக்கான செர்வானி ஆடைகளும் உருவாக்கப்படுகின்றன.கோசா பட்டு சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழ்ந்து வரும் தேவாங்க சமூகத்தினரால் நெய்யப்படும் கைத்தறிப்பட்டாகும். இம்மாநிலத்தின் சம்பா, பிளாஸ்பூர், ரெய்கர், ஜக்தல்பூர் மற்றும் பாஸ்டர் பகுதிகளில் கோசா பட்டுச் சேலைகள் மற்றும் துணிகள் நெய்யப்படுகின்றன. மேலும்,மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் உள்ள கணேஷ்பூர் என்ற கிராமத்திலிருந்து 1871 ஆம் ஆண்டு முதலே கோசாபட்டு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. கோசா என்பதன் அர்த்தம் உள்ளூர் மொழியில், பட்டுப் புழுக்கூடு என்பதாகும். அர்ஜுன், சாஜா(அ) சால் மரத்தின் மேல் வளரும் பட்டுப் புழுக்களில் இருந்து,கோசா பட்டிழைகள் உருவாக்கப்படுகிறது. கோசாபட்டு புழுக்கூடுகள் எலுமிச்சம் பழ அளவு இருக்கும். இவற்றை காட்டில் வாழும் பழங்குடி இனத்தவர்கள் சேகரித்து கைத்தறி நெசவு நெய்யும் தேவாங்கரிடமோ அல்லது வர்த்தகரிடமோ விற்பனை செய்கின்றனர்.இந்தப் பட்டு புழுக்கள் இயற்கையாகவே, தேன் நிறத்திலும், வெண்மை கலந்த பழுப்பு நிறத்திலும், மஞ்சள் நிறத்திலும்,சாம்பல் நிறத்திலும்,இளம் மஞ்சள் நிறத்திலும் உள்ளன. இயற்கையாகவே இந்த நிறங்கள் அமைந்திருந்தாலும் அப்பட்டு புழுக்களிலிருந்து எடுக்கப்படும் பட்டிழைகளில் இயற்கை சாயங்கள் ஏற்றப்பட்டு விதவிதமான நிறங்களில்,பட்டிழைகள் உருவாக்கப்படுகின்றன.

ஒவ்வொரு கோசா பட்டு புழுக்களிலிருந்தும் 1 முதல் 2 கிராம் வரை பட்டுகள் எடுக்கப்படுகின்றன. இதிலிருந்து 274.32 மீட்டர் அளவுள்ள பட்டிழைகள் தயாரிக்க முடியும். கோசாப் பட்டு, காகிதத்தைப் போன்று மென்மையானதாகவும், அதே சமயத்தில் உறுதியானதாகவும் உள்ளது. இப்பட்டின் இழைநயம்,அதில் அழகான உருவங்களை அச்சிடுவதற்கும், வரைவதற்கும் ஏற்றதாக உள்ளது.

கை வேலைப்பாடுகள் மற்றும் கோசா பட்டின் தரத்தைப் பொறுத்து ரூ.400 லிருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பு வரை விலை நிர்ணயம் உள்ளது. திருமணம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளில் உடுத்துவதற்கு ஏற்றதாக வெள்ளி மற்றும் தங்க ஜரிகை கொண்டு கோசாபட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கோர்பா மற்றும் சம்பா பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் கோசா பட்டுச் சேலைகள் உயர்தரம் உடையவையாகும். சம்பா பகுதியில் உற்பத்தி ஆகும் கோசாபட்டு உலகிலேயே மிக உயர்ந்த தரப்பட்டாகக் கருதப்படுகிறது. இங்கு உற்பத்தி ஆகும் கோசாபட்டுச் சேலைகள் மற்றும் துணிகள் ஐரோப்பா,வளைகுடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கோசா பட்டு நெய்வது குறித்து சம்பா மாவட்டத்தில் சூரி என்ற கிராமத்தில் வசிக்கும் கைத்தறி உற்பத்தியாளரான திரு. சந்திரமணி தேவாங்கன் கூறியதாவது:

என்னிடம் 100 கைத்தறிகள் உள்ளன. கோசா பட்டுப்புழுக் கூட்டினை பழங்குடியின மக்கள் சேகரித்து, எங்களிடம் விற்கின்றனர். எலுமிச்சம்பழ அளவுள்ள அந்த பட்டுப்புழுக் கூட்டினை மாலையாகக் கோர்த்து வெயிலில் உலர வைக்கிறோம். பட்டுப் புழுக்களிலிருந்து பட்டு இலைகளை உற்பத்தி செய்யும் பணியில் வீட்டுப் பெண்கள் கவனம் செலுத்துகின்றனர். பெண்களால் உற்பத்தி செட்யப்பட்ட பட்டிழைகளைக் கொண்டு பட்டு உற்பத்தி செய்யும் பணியில் ஆடவர் ஈடுபடுகின்றனர். குழந்தைகளின் படிப்புச் செலவுகளை ஈடுகட்டுவதற்கு பெண்களின் வருமானம் பயன்படுகிறது இவ்வாறு திரு. சந்திரமணி தேவாங்கன் கூறினார்.

சம்பா மாவட்டத்தில் உள்ள சந்திராபூர் நகர் தேவாங்கர்கள் பெருவாரியாக வாழும் ஊர் ஆகும். கோசா பட்டு உற்பத்தியில் சந்திரபூருக்கும் முக்கிய இடம் உண்டு. இந்நகரில் வாழும் பதிராம் தேவாங்கன் கோசா பட்டு உற்பத்தியை பற்றி கூறியதாவது:

கோசாபட்டுச் சேலை உற்பத்தி என்பது பல கட்டங்களைக் கொண்டதாகும். இதில் ஆரம்பக் கட்டம் முதல் கடைசி கட்டம் வரை எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் பணியாற்றுகின்றோம். எங்களுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் இந்த சேலை உற்பத்தியின் பல்வேறு கட்ட பணிகளில் பங்கு கொள்வதை நீங்களே பார்க்கலாம்.

கோசாபட்டுப் புழுக்களை பழங்குடியினர் சேகரித்து எங்களிடம் விற்கின்றனர். அந்த பட்டுப் புழுக்களிலிருந்து நல்லதைத் தேர்ந்தெடுத்து,தண்ணீரில் போட்டு கொதிக்க வைப்போம். பின்னர் பட்டுப்புழுக் கூட்டிலிருந்து பட்டிழை உற்பத்தி செய்து இயற்கை சாயமிடுவோம். சாயமிட்ட பட்டிழைகளைக் கொண்டு கைத்தறியின் மூலம் கோசா பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்வோம்.

ஒரு கோசாபட்டு சேலைகள் உருவாக்க ஒரு வாரம் வரை எடுத்துக் கொள்வோம். இதயம் தொட்டு இணைத்த பட்டில் உருவாகுபவை, எங்கள் கோசா பட்டுச் சேலைகள் என்றார் பதிராம் தேவாங்கன்.

பதிராம் தேவாங்கனின் மனைவி கூறியதாவது:

காலம் காலமாக பரம்பரை பரம்பரையாக எங்களுடைய சமூகத்தவர்கள் நெய்து வருபவை இந்த கோசா பட்டுச் சேலைகள். சீன பட்டை விட உயர்ந்த தரம் உடையதாக கோசா பட்டு இருப்பதை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே உங்களால் உணர முடியும் என்றார்.

சம்பா நகரில் கோசா பட்டுச் சேலை உற்பத்தியாளராக உள்ள அஜய் தேவாங்கன் கூறியதாவது:

நமது தேவாங்க சமூகத்தவர்கள் கோசா பட்டுச் சேலை உற்பத்தியாளர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஒரு சேலை உற்பத்தி செய்ய ரூ.500 வரை கூலி கிடைக்கிறது. ஒரு சேலை நெய்து முடிக்க மூன்றிலிருந்து ஐந்து நாட்கள் வரை ஆகின்றது. இந்த வருமானத்தை வைத்துதான் நெசவாளர்கள் குடும்பத்தை நடத்த வேண்டும். முந்தைய காலகட்டத்தில் உள்ளது போல் தற்பொழுது சேலை விற்பனை இல்லை. எங்களுக்கு இந்தத் தொழிலைத் தவிர வேறு தொழில் தெரியாது. எனவே, இந்தத் தொழிலைத்தான் செய்து கொண்டிருக்கிறோம். என்னிடத்தில் 100 கைத்தறிகள் உள்ளன. இவ்வாறு அவர் அஜய் தேவாங்கன் கூறினார்.

சட்டீஸ்கரில் தற்போது அஹிம்சா பட்டு என்ற புதியவகை கோசாபட்டுச் சேலைகள் தயாரிக்கப்படுகிறது. பட்டுக் கூட்டிலிருந்து புழுவானது பட்டுப் பூச்சியாக வெளியேறிய பிறகு உள்ள பட்டுக்கூட்டிலிருந்து தயாரிக்கப்படும் பட்டுச் சேலைகளைக் கொண்டு நெய்யப்படுபவை இந்த அஹிம்சா கோசா பட்டுச் சேலைகள்.

புதிய ரகங்கள் தோன்றும் அதே சமயத்தில் , தறிக்குழியில் தங்கள் குழந்தைகள் வீழ்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் அம்மாநில தேவாங்கர்கள் மனதில் மேலோங்கியுள்ளதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தமது பிள்ளைகளைக் கல்வியில் முன்னேறச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர்களிடம் மேலோங்கியுள்ளது.

மத்திய பிரதேசத்திலிருந்து, சட்டீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் வசிக்கும் தேவாங்கர்களால், 1981 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் தேவாங்கன் சொசைட்டி என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. இது சட்டீஸ்கர் மாநிலத்தில் வாழும் தேவாங்கர்களின் நலனைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. பல்வேறு சமூகப் பணிகளை இவ்வமைப்பு செய்து வருகிறது. திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அதிலடங்கும். சட்டீஸ்கர் மாநில தேவாங்க மக்களிடையே 60 விதமான வம்சங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் உள்ள தேவாங்கர்களால் அன்னை ஸ்ரீ பரமேஸ்வரி விழா கொண்டாடப்படுகிறது. மேற்கண்ட அமைப்பின் சார்பாக பசந்த் பஞ்சமி தினமான ஜனவரி 31, 2009 அன்று அன்னை ஸ்ரீ பரமேஸ்வரி விழா மாநிலம் தழுவிய அளவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் மூலம் சமூக மக்களிடம் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் வளர்க்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. ......


நன்றி

தகவல் 

திரு. A. தியாகராஜன். அவர்கள்