25 ஆகஸ்ட், 2014

தேவாங்கர் குல வரலாறு - மூன்றாம் பகுதி



தேவாங்க சமுதாயத்தைப் பற்றி ஜப்பானியப் பெண்மணி யுமிகொ நானாமி ஆய்வு செய்துள்ளார். அது பற்றிய விபரம்



1998 ஆம் ஆண்டு தேவாங்க சமுதாயத்தை ஆய்வு செய்யும் பொருட்டு சேலம் வந்துள்ளார். அங்கு, சேலம் திருமண மண்டப நிர்வாகத் தலைவராக அப்போது இருந்த காலஞ் சென்ற திரு.ஓ.எஸ்.சுப்பிரமணியஞ் செட்டியாரை சந்தித்து, தான் மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகள் குறித்து விளக்கியுள்ளார். மேலும், அவருடைய உதவியையும் நாடியுள்ளார்.

அதனடிப்படையில், தேவாங்க சமுதாயம் குறித்த இரண்டு புத்தகங்களை, யுமிகொவிற்கு அவர் தந்துள்ளார். அதற்காக நன்றி தெரிவித்து 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை, திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ எழுதியுள்ளார்.

அதன்பிறகு 4 வருடம் கழித்து (07.12.2002) தனக்கெழுந்த சந்தேகங்களுக்கு விளக்கம் கோரி திரு.ஓ.எஸ். சுப்பிரமணியஞ் செட்டியாருக்கு யுமிகொ கடிதம் எழுதியுள்ளார். அவர் கேட்ட கேள்விகளுக்கு வைணவக்கடல் தேவாங்கர் செம்மல் சேலம் புலவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பதிலளித்துள்ளார். 

ஜப்பானியப் பெண்மணியின் கேள்விகளும், அதற்கு வைணவக் கடல் அளித்த பதில்களும் பின்வருமாறு



கேள்வி: இந்தப் பட்டியலுக்கு மேல் எந்த ஊர்களில் ஏராளமாக உங்கள் குலத்தவர்கள் இருக்கிறார்கள்?

பதில்: ஆலாலபுரம், ஆரணி, அருப்புக்கோட்டை, ஆத்தூர், வனவாசி, சின்னாளபட்டி, சிந்தாமணி(மேச்சேரி அருகில்), கோயம்புத்தூர், தாராபுரம், இளம்பிள்ளை, ஜலகண்டாபுரம், ஜேடர்பாளையம், காக்காவேரி, கொமாரபாளையம், மதுரை, மேட்டூர், நாமக்கல், நங்கவள்ளி, ஓமலூர், படவேடு, பள்ளிப்பாளையம், ராசிபுரம், சேலம், (குகை, ஜாரி கொண்டாலாம்பட்டி), சங்ககிரி, செம்மாண்டப்பட்டி, சீராப்பள்ளி, சிறுமகை, சிறுமுகைப் புதூர், தூப்பப்பட்டி, உடுமலைப் பேட்டை மற்றும் வேம்படிதளம்.


தாங்கள் கொடுத்திருக்கும் பட்டியலில் சேலம் மாவட்டத்தில் விட்டுப் போன ஊர்கள்: சஞ்சீவராயன் பேட்டை, எஸ்.வி.ஆர்.நெசவாளர் காலனி, பெருமாள் கோவில் மேடு, களரம்பட்டி, ஸ்ரீராம் நகர், வேடு குத்தாம்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, சின்னப்பம்பட்டி, பஞ்சி காளிப்பட்டி, மலையம்பாளையம், குப்பம்பட்டி, கரட்டாண்டிப்பட்டி.
மேலும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் தேவாங்கர்கள் பெருவாரியாக வாழ்ந்து வருகிறார்கள்


கேள்வி: உங்கள் கூட்டத்தில் செட்டிகாரர்களும், பெத்தர்களும், சேஷராஜுகளும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? கூட்டத்தின் பெயர் என்ன?

பதில்: தேவாங்கர்களில் சுமார் 20, 30, குடும்பங்கள் இணைந்து இருப்பதற்கு பங்களம் என்று பெயர். இதன் தலைவர் செட்டிகாரர். இவருக்கு மந்திரி போன்றவர் பெத்தர். பணியாளர் சேசராஜு . இப்படிப்பட்ட பங்களங்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றைக் கணக்கெடுப்படுது கடினம். எனவே, செட்டிக்காரர், பெத்தர், சேசராஜு ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.
கூட்டத்தின் பெயர் பங்களம். பல பங்களங்கள் சேர்ந்தால் அதன் பெயர் ஸ்தலம்.



கேள்வி: சேசராஜு , சிங்கத்தார் என்ற இரண்டு சமுதாய சேவைக்காரர்களுக்கும் என்ன வித்யாசம் இருக்கிறது?

பதில்:சேசராஜு , சிங்கத்தார் என்ற இருவரும் சமுதாயப் பணியாளர்கள் தான். ஆதி காலத்தில் சிங்கத்தார் மட்டுமே சமுதாயப் பணியை செய்து வந்தார்கள். தற்பொழுது சிங்கத்தார் வம்சமென்பது பெரும்பாலும் இல்லை. எனவே, தேவாங்கர்களில் சிலரே சேசராஜு பணியை செய்து வருகிறார்கள்.
தேவாங்கர்கள் அனைவரும் தேவல முனிவரின் வம்சா வழியினர். சிங்கத்தவர்கள் தேவலர் வம்சா வழியினர் அல்ல



கேள்வி: தேவாங்க குலத்தில் தெலுங்கும்,கன்னடமும் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. அதைப் பற்றி சிலர் இரண்டும் ஒற்றுமையானதென்று சொல்கிறார்கள். பலர் இரண்டு பிரிவுகள் இன்றைக்குத் தனித்து ஏற்பட்டது. ஒற்றுமையானதல்ல என்று சொல்கிறார்கள். உங்களுடைய எண்ணம் எப்படி? 

பதில்: தேவாங்க குலத்தில் தெலுங்கு மொழி பேசுவோர்கன்னட மொழி பேசுவோர் என இரண்டு பிரிவுகள் தமிழ்நாட்டிலும், கர்நாடகத்திலும் உள்ளனர்.
இந்தியப் பெருநாட்டில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், உத்திரப் பிரதேசம், நேபாள எல்லையில் கோரக்பூர் என்னும் ஊர்களில் அந்தந்த மாநில மொழிகளைப் பேசிக் கொண்டு தேவாங்கர்கள் இன்று உலக அளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தேவாங்கர்கள் எந்த மொழி பேசினாலும் குல தெய்வம் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் மட்டும் தான். ரிஷி கோத்திரங்கள் 700, குலங்கள் 10 ஆயிரம், ஜகத்குரு பீடங்கள் 5. எனவே, எந்த மொழி பேசினாலும் அனைவரும் ஒன்றே. வழிபடும் தெய்வம்--கோத்திரங்கள்--குலங்கள்--ஜகத்குரு பீடங்கள்--அனைவருக்கும் மூலகர்த்தா தேவல மாமுனிவர் என்பதினாலும், தேவாங்கர்கள் அனைவரும் ஒன்றே. எனவே, தேவாங்கர்களை மொழிவாரியாக அல்லது தமிழ்நாடு, கர்நாடகம் என்ற பிரதேச வாரியாகப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பது பெருந்தவறு

கேள்வி: அமாவாசையில் கத்தியடிப்பதற்கு உங்கள் குல உறுப்பினர் யாவரும் பங்கெடுக்க முடியுமா? இல்லை என்றால் எப்படி ?

பதில்: கத்தி போட்டுக் கொள்வது என்பது ஸ்ரீ சவுடேஸ்வரி அன்னையின் திருவிழாவில் மட்டும் தான். மற்றும் அமாவாசை நாட்களில் ஸ்ரீசவுடேஸ்வரி அம்பிகைக்கு பூஜை நடக்கும் பொழுதும் கத்தி போட்டுக் கொள்வது வழக்கம். இதற்கு அலகு சேவை (Traditional Name) என்று பெயர்.
தேவாங்க குலத்தில் பிறந்த ஆண்கள் அனைவரும் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் சந்நிதியில் தீட்சை பெற்றுக் கொண்டு அலகு சேவை செய்யலாம். (கத்தி போடுவதற்கு அலகு சேவை என்று சொல்லப்படும்).


கேள்வி: ஐந்து திணைகளில் நெசவாளர்களுக்கு எந்தத் திணைக்குத் தொடர்பு இருக்கிறது என்று சொல்ல முடியும்?

பதில்: நெசவுத் தொழில் குறிஞ்சித் திணையோடு தொடர்பு உடையது.

கேள்வி: எந்த வருடத்தில் உங்களுடைய சமுதாயத்தின் சபை அமைக்கப்பட்டது?

பதில்: 25 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீசவுடேஸ்வரி நற்பணி மன்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டது. அதற்கு முன் தேவாங்க மகாசபை என்கிற பெயரிலும் வேறு பல பெயர்களிலும் நாடு முழுவதும் ஆங்காங்கே இருந்து வந்தன.


கேள்வி: ஒஸக்கோட்டை உங்களுடைய கூட்டத்திற்கு எப்படி முக்கியம்? 

பதில்: சேலம் மாவட்டத்தில் தாராபுரம், ஒஸக்கோட்டை, அமரகுந்தி, காரிமங்கலம், சேலம் என்னும் ஐந்து ஸ்தலப் பட்டக்காரர்களுக்கு உட்பட்டவர்களாக தேவாங்கர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஒஸக்கோட்டை ஸ்தலத்தின் தலைமை திருக்கோயில் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலாகும்.

கேள்வி: சேலத்தில் பட்டக்காரர் இருக்கிறாரா? யார்?

பதில்: சேலத்தில் பட்டக்காரர்கள் இருக்கிறார்கள். 1.ஒஸக்கோட்டை, 2.அமரகுந்தி, 3. காரி மங்கலம், 4. சேலம் ஆகிய ஸ்தலங்களில் பட்டக்காரர்கள் வசிக்கிறார்கள். தாராபுரம் பட்டக்காரர் மட்டும் திருப்பூரில் வசிக்கிறார்.

கேள்வி: செட்டிதனக்காரர், பெத்தர் இவர்கள் பதவி பரம்பரையாகச் செய்யும் வீட்டின் பெயர்கள் என்ன?

பதில்: செட்டிதனக்காரர், பெத்தர் இவர்கள் பதவி பரம்பரையாக வருவன. வங்குசம் என்று கன்னடத்திலும், இண்டி பேரு என்று தெலுங்கு மொழியிலும் வீட்டின் பெயர் என்று தமிழிலும் சொல்லப்படுவன மூன்றும் ஒன்றே ஆகும்.
இத்தகைய பெயர்கள் தேவாங்கர் குலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டு இருக்கின்றன. இவற்றில் ஒழுக்கமும், நேர்மையும் உள்ளவர்கள் செட்டிகாரராகவும், பெத்தராகவும் இருக்கலாம்.

கேள்வி: நேபாள நாட்டின் ஐஸ்வரி தேவி அவரோடு உங்கள் சமுதாயத்துடைய முறை எப்படி இருந்தது? 

பதில்: நேபாள நாட்டின் ஐஸ்வரி தேவி என்று நீங்கள் யாரைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று புரியவில்லை. நேபாள நாட்டின் மகாராணியாக இருப்பின் அவர்களுக்கும் தேவாங்க சமுதாயத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதற்கு சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. மேலும், நேபாள மன்னர் தேவாங்கர் என்று செவிவழிச் செய்தி ஒன்று சேலத்தில் உலவுகிறது. இதற்கும் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நேபாள நாட்டில் தேவாங்கர்கள் வாழ்ந்தார்கள். மேலும், நேபாள எல்லையில் உள்ள கோராக்பூரில் இன்றும் தேவாங்கர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.

கேள்வி: உங்களுடைய குலம் தமிழ்நாட்டில் எத்தனை பிரிவு இருக்கிறது? பெயர் எழுதுங்கள். அ) சேலம்: ஆ)மதுரை/அருப்புக்கோட்டை: 
இ)ஒன்பது நாடு: ஈ: ?


பதில்: உலகம் முழுவதும் தேவாங்கர்கள் 700 கோத்திரம் பிரிவுகளிலும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்குசப் பிரவுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தி எல்லா தேவாங்கர்களுக்கும் பொருந்துவதாகும். ரிஷி கோத்திரம் என்பது அண்ணன் தங்கை திருமண உறவு ஏற்படாமல் தடுக்கிறது. உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் கோத்திரத்தின் வழியாக சகோதரர்களா? அல்லது சம்பந்திகளா? என்பதைத் தெரிந்து கொள்கிறோம். 


இவ்வாறு யுமிகொவின் கேள்விக்கு வைணவக்கடல் பதிலளித்துள்ளார்.

இவரைப் போன்றே தில்லி பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய முனைவர் விஜயா ராமசாமி,ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்திற்காக 'டெக்ஸ்டைல் கம்யனிட்டி' என்ற தலைப்பில் ஆய்வு செய்துள்ளார். அப்பெழுது தேவாங்கர் சமூகத்தைப் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.

தகவல்

திரு. A. தியாகராஜன் அவர்கள்