7 ஆகஸ்ட், 2014

தேவாங்கர்களின் திவ்யதேசங்கள்





தேவாங்கராக உள்ள அனைவரும் ஒரு முறையாவது  தரிசிக்க வேண்டிய திருத்தலங்கள் .

.1 ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்.
2 மொதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்.
3. நந்தவரம் செளடேஸ்வரி தேவி கோவில்
4. கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்
5. நேபாளத்தில் பசுபதிநாத் கோவில்.
6. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்.
7. ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடம்.
8. ஸ்ரீ காயத்ரி பீடம் , திருமூர்த்திமலை.
9. உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் ஆலயம்.

தேவாங்கர்களுக்கு இந்த ஒன்பது ஸ்தலங்களும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்வோம்.


1. ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவில்:- நம் இன முதல் தோன்றலான தேவலரின் ஏழாவது  அவதாரமான தேவதாசமைய்யன் அவர்கள் தான் 365 நாட்கள் நெய்த துணியை (கம்மி பாவடலு) இந்த கோவிலில் தான் மஹா சிவராத்திரி நாளில் கொடியாக ஏற்றி தன் சக்தியின் மூலம் தாம் கட்டகூடிய கோவிலில் செளடாம்பிகையுடன் இராமலிங்கராக அருள்பாலிக்க மல்லிகார்ஜூன மூர்த்தியிடம் வரம் பெற்றார்

அந்த கோவிலில் இருந்து தான் சௌடாம்பிகை அம்மனை ஆமேத நகர் அழைத்து வந்ததாக நமது புராணங்கள் கூறுகின்றது. அப்படி அன்னையை அழைத்து வரும் பொழுது ஏற்பட்ட சிறு தவறினால் நம் அன்னை நீரில் மறைந்து விட்டாள். அப்பொழுது தான் நாம் கத்தியால் நம்மை வருத்தி நம் அன்னையை அழைக்க ஆரம்பித்தோம் .

இன்றும் அதனை  நினைவு படுத்தும் விதத்தில் நாம் அலகு சேவை செய்து வருகிறோம்.

ஶ்ரீஇராமலிங்க செளடாம்பிகையாக வழிபட முதன் முதலில் வரம் பெற்ற ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி கோவிலை மறந்து விட முடியுமா. இக்கோவில் தேவாங்கர்களுக்கு முக்கிய ஸ்தலம் அல்லவா
                                                                   
 இன்றும் அங்கு சிவராத்திரி அன்று நம் தேவாங்கர்கள் தான் கொடி ஏற்றுகின்றனர்.

மேலே உள்ள படத்தில் சிவராத்திரி அன்று நம் தேவங்கர்கள் நெய்த துணியை தோரணமாக கட்டியிருப்பதை பாருங்கள். கோபுர உச்சியிலிருந்து வெள்ளை துணி மூன்று வரிகளாக வருவதை பாருங்கள்.

ஸ்ரீசைலத்தில் இன்று தேவாங்கரின் உரிமை:

அன்று தேவதாசமைய்யன் கொடித்துணி ஏற்றி மகிழ்ந்தார்.  ஸ்ரீசைலத்தில் சிவராத்திரி அன்று, இதனை நினைவூட்டும் விதத்தில்  ஸ்ரீசைலத்தில் தேவாங்கரின் வழிபாடு சிவராத்திரி விழாவில் நடைபெறுகின்றது.
       
ஸ்ரீசைலத்தைச் சுற்றியுள்ள சீராளா முதலான ஊர்களில் தேவாங்கர் வாழ்ந்து வருகின்றனர்.  இங்கு தேவாங்க நெசவாளர் வீடுகளில் இரண்டு தறிகள் உள்ளன.  காலையில் எழுந்து நீராடித் தூய்மையாக சுவாமி தறியில் ஒரு முழம் நெய்து விட்டு அதன் பின் தம் ஜீவனத் தறியில் நெசவு நெய்வார்கள்.  வீட்டில் இரண்டு தறிகள் இருக்கும். ஒன்று சுவாமித் தறி.  மற்றது ஜீவனத் தறி.  சுவாமித் தறியில் ஆண்டு முழுக்க நெய்யும் துணி 365 முழம் இருக்கும்.

இங்ஙனம் பல தேவாங்கரும் நெய்யும் துணிகளை ஒன்று திரட்டிக் கொண்டு வருவார்கள்.  இத்துணிக்கு 'தலபாகலு' என்று பெயர். 

சிவராத்திரிப் பூசனை நான்கு ஜாமங்களில் நடைபெறும் பூசனை ஆகும்.  மாலை 6 மணி முதல் 9 மணி வரை முதல் ஜாமம்.  இரவு 9 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் ஜாமம். நடுநிசி 12 மணி முதல் 3 மணி வரை மூன்றாம் ஜாமம். 3 மணி முதல் 6 மணி வரை நான்காம் ஜாமம்.   இந்நான்கு ஜாமங்களுள் இரண்டாம் ஜாமமான இரவு 9 மணி முதல் 12 மணியில் கடைசி 24 நிமிடங்களும், மூன்றாம் ஜாமமான நடுநிசி 12 மணி முதல் 3 மணியில் முதல் 24 நிமிடங்களும் என 48 நிமிடங்கள், அதாவது இரவு 11 மணி 36 நிமிடங்களிலிருந்து 12 மணி 24 நிமிடங்கள் வரையிலான 48 நிமிடங்கள் மஹாநிசிக் காலம் என்று பெயர்.  இந்த நேரம் தான் சிவராத்திரியில் லிங்கோத்பவர் உற்பத்தி ஆன காலம். 

இம்மஹாநிசிக் காலத்தில் லிங்கோத்பவர் உற்பத்தி ஆகும் காலத்தில் ஸ்ரீசைல ஆலயத்தின் உள்ளேயிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு விடுவார்கள்.  தேவாங்கர் மட்டும் ஆலயத்தினுள் திகம்பரராக இருப்பார். திகம்பர ஸ்வாமியான மல்லிகார்ச்சுன மூர்த்திக்கு தேவாங்கர் திகம்பரராக இருந்து வேமாரெட்டி கோபுரத்தில் இருந்து நந்தி வரை இத்தலபாகலு துணியைச் சுற்றிப் பூசிப்பார். 

இந்நடைமுறை இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றது. 
    
படைவீடு ஜகத்குரு 32 வது பட்டம் சென்ன ஓம் ஸ்ரீசாம்பலிங்க மூர்த்தி ஸ்வாமிகள் இதனைக் 'கம்மி பாவாடலு' என்று தெரிவித்து இருந்தார்.


இப்பெயர் நடைமுறையில் தலபாகலு என்று அழைக்கப் பெறுகின்றது. புராண காலம் தொட்டு இன்றளவும் இத்திருத்தலம் தேவாங்கருடன் பின்னிப் பிணைந்து உள்ளது.

அதனால் அங்கு சென்று அருள் பெறுவோம்.

ஆந்திர மாநிலம். கர்னூல் மாவட்டம் ஆத்மகூர் தாலுக்காவில் உள்ள நல்லமலை என்றும் கருமலை என்றும் பெயர் பெற்ற மலை முகடுகளுக்கிடையே இத்திருத்தலம் அமைந்துள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றினாலும் புகழ் பெற்றது.  இங்கு கிருஷ்ணாநதி வடதிசை நோக்கிப் பாய்கின்றது.  இங்கு இதற்கு பாதாள கங்கை என்று பெயர்.
   
சுவாமியின் திருநாமம் ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தி அம்பாள், ஸ்ரீபிரமராம்பா.

( ஸ்ரீசைலத்தில் தேவாங்கர் சத்திரம் உள்ளது)


2. மொதனூர் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில்:- இதன் சிறப்பு என்னவென்றால்  இங்குதான் நமது தேவல முனிவரின் ஏழாவது அவதாரமான  தேவதாசமைய்யன் அவர்கள் சமாதி உள்ளது.

மேலும் இவரால் கட்டப்பட்ட ஒரு அழகிய கோட்டையுடன் கோட்டையின் நடுவிலே அன்னை ஒய்யாரமாக அருள் பாலித்து கொண்டு இருக்கும் நம் அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி கோவில் உள்ளது.

தேவலரின் கடைசி அவதார புருஷரின் சமாதியை தரிசித்து ஆசிபெற வேண்டாமா

மொதனூர்என்னும் ஊர் இது ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் குல்பர்கா மாவட்டம் , கர்நாடக மாநிலத்தில்   உள்ளது.

3. நந்தவரம் செளடேஸ்வரி தேவி கோவில்:- இந்த கோவிலின் சிறப்பை காண்போம். நம் தேவாங்கர்களை இந்த கோவிலின் முன் வாசல் வழியாக வர கூடாது பின் வாசல் வழியாகத்தான் வர வேண்டும் என உத்தரவு இடப்பட்டதால். அம்மனே கோபித்து கருவரையை விட்டு வெளியேறி தேவாங்கர்களுக்காக பின் வாசாலுக்கு நேராக  திரும்பி அமர்ந்து தரிசனம் கொடுத்த கோவில்.

நம் தண்டகத்தில் நந்தவனம் என்று தவறாக அழைத்துக்கொண்டு இருக்கின்றோம். இங்கே அன்னைக்கு கோயில் உள்ளது அனால் அன்னை கருவறையில் இல்லை தனியாக நாம் குலத்துக்காக நிலத்தில் சுரங்கம் அமைத்து அமர்ந்திருக்கிறாள் . இது எதனால் என்ற கேள்வி நமக்கு தோன்றும் , ஏனென்றால் நம் புராண கதைகளிலே படித்துள்ளோம் "நமது சௌடேஸ்வரி நந்தவைதீகர்களுக்கு குல தெய்வம் ஆன கதை" அப்படி நாமும் நந்தவைதீகர்களும் ஒரே கோவிலில் சௌடேஸ்வரியை  7 நிலை ராஜகோபுரம் கட்டி கொலுஅமர்தி இருந்தோம் ஆனால் சில நாட்கள் கடந்த பின்னர் கோவில் நிர்வாகம் "நந்தவைதீகர்களுக்கு" சென்றது அவர்கள் நம்மவர்கள் கோவிலுக்குள் வர தடை செய்தார்கள் பின் நம்மவர்கள் கோவிலில் மறுபுர மதில் சுவரில் வழி அமைத்து அதில் வந்து நம் அன்னையை வழிபட்டார்கள் .

இந்த சம்பவத்தை பார்த்த நம் தாய் தன் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவமானத்தை போக்க அவள் அந்த கருவறையை விட்டு நம் குல மக்கள் வரும் வழியில்  வந்து அமர்ந்தாள். இதை நாம் இப்போதும் "நந்தவரம்என்னும் ஊரில் காணலாம் .

தற்சமயம் ஆலயத்தைச் சுற்றி கருங்கல்லால் ஆன மதிற்சுவர் எழுந்துள்ளது.  இக்கருங்கல் மதிற்சுவரை இடித்துத் தான் தேவாங்கர் ஆலயத்தின் உள்ளே வர வழி அமைத்தனர்.  கருவறைக்கு முன்பாக ஒரு சிறிய மண்டபம் அமைந்துள்ளது.  இதில் மகாமேடு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இம் மேடுவினுக்கு பிராமண பூசனை நடைபெறுகின்றது. கருவறை அன்னைக்கு தேவாங்கர் பூசனை செய்கின்றனர்.

நந்தவரம் என்ற ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ளது.  நந்தியால் தாலுக்காவில் இருந்து மதன பள்ளி செல்லும் வழியில் உள்ளது. .

நம் தேவாங்க மக்களுக்காக இடம் மாறி அமர்ந்து காட்சி கொடுக்கும் அம்மனை அவசியம் காண வேண்டும் என்பது சொல்லி தெரிய வேண்டுமா

4.. கங்காசாகர் கபிலேஸ்வரர் ஆலயம்:- . இந்த கோவிலை கட்டியவர்கள் நம் தேவாங்கர்கள் , இந்த கோவில் வரதந்து மகரிஷி கோத்திரகாரர்களின் குல தெய்வ கோவிலாகவும் உள்ளது. இந்த கோவிலின் அதிசயம் என்ன வென்றால்

இந்த ஆலயம் கடலுக்கு அடியில் உள்ளது தை மாதம் முதல் மூன்று நாட்கள் மட்டும் தான் வெளியில் தெரியும் பக்தர்கள் செல்லவும் முடியும் . மற்ற நாட்களில் அந்த கோவில் கடலுக்கு அடியில் இருக்கும் அதன் மீது மிகப்பெரிய கப்பல்கள் எல்லாம் செல்லும்.

இந்த கோவில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு 100 மைல்  தூரத்தில் கங்காசாகர் என்னும் இடத்தில் உள்ளது.

இந்த ஆச்சரியம் ஊட்ட கூடிய நம்மவர்கள் கட்டிய அதிசய கோவிலையும் ஒரு முறை பார்க்கலாமே

5. நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவில்:- நாம் தண்டகத்தில் கூறுவோமே "நேபாள தெசதல்லி..." ஆம் நேபாளத்தில் உள்ள பசுபதிநாதர் கோவில் , நாம் ஒரு யுகத்தில் நேபாளத்தில் வாழ்ந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது . அங்கே சிவன் சுயம்பு வடிவில் தோன்றி உள்ளார் . அங்கே நாம் கண்டகி நதியில் நல்ல வழுவழுப்பான கரிய கற்கள் இருக்கும் அதை சாளக்ராமம் என்று கூறுவார்கள் அது நமது குல திருவிழாக்களில் சக்தி அழைப்பு பேழையில் வைத்து சக்தி அழைக்கும் நடைமுறை உள்ளது .

இந்த கற்களை தான் நாம் அங்கிருந்து தென்திசை நோக்கி வரும்பொழுது ராமலிங்கேஸ்வரர் ஆக நினைத்து நம்முடன் எடுத்து வந்தோம் என்று நமது குல அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள்
.
அதனால் அந்த புனிதமான நதியையும்,பசுபதீஸ்வரரையும் வணங்கி வருவோம்.

Deopatan, Kathmandu, Nepal





6. மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் :- நாம் நம் அன்னை சௌடேஸ்வரிக்கு திருவிழா எடுக்கும் பொழுது நமது குலம் காத்த சாமுண்டி அன்னையையும் பெட்டது சௌண்டம்மன் என்று குதிரை மீது அழைக்கிறோம். அந்த சாமுண்டி அன்னை மைசூர் நகரத்தில் நடுநாயகமாக உள்ள சாமுண்டி மலை மீது அழகிய திருக்கோவிலில் சண்ட முண்டரை அளித்த கோலத்தில் காட்சி தருகிறார்கள்.

இந்த அன்னை தான் நவராத்திரியின்  பொது மைசூர் மகாராணியாக ஜம்பு சவாரியில் வலம் வருகிறார் ஒன்பது நாள் கொலுவிருந்து .தேவலரை சாமுண்டீஸ்வரியாக அவதாரம் செய்து அசுரரிடமிருந்து காத்து அதன் பிறகுதான் சாமுண்டி சாந்த சொரூபிநியாக சௌடேஸ்வரியாக அருளினார். இந்த மைசூர் கர்நாடக மாநிலத்தில் உள்ளது .

7. ஹம்பி ஹேமகூட காயத்ரி பீடம்:-   ஹம்பி ,கர்நாடக மாநிலம் .
ஹம்பி நகரம் மிகவும் அழகான பழமைவாய்ந்த தேவாங்க மன்னர்கள் ஆட்சிசெய்த நகரம் அங்கே மிகவும் தொன்மையான கற்சிற்பங்களும் கோவில்களும் உள்ளன அங்கே நமது ஹம்பி ஹேமகூட தேவாங்க ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி சுவாமிகள்  அருளாசி வழங்கி கொண்டிருக்கிறார்கள்.


8. ஸ்ரீ காயத்ரி பீடம் திருமூர்த்திமலை:-  தமிழ்நாடு இங்கே நம் குல அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி உடன் வேத மாதா ஸ்ரீ காயத்ரி தேவி ஆகியோர் தனி தனி சந்நிதிகள் கொண்டு அந்த மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் திருமூர்த்தி அணையை நோக்கியபடி மிகவும் அழகாக ஒய்யாரமாக எழுந்தருளி உள்ளார்கள் . அத்துடன் அங்கு நமக்கு தேவாங்க மடமும் அனைத்து வசதிகளுடன்  உள்ளது .
திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே உள்ளதால் மிகவும் எளிதாக அங்கே சென்று வரலாம்.



9. உஜ்ஜைன் மகாகாளேஸ்வரர் ஆலயம் :-
நமது தேவாங்கர்கள் வடக்கிலிருந்து ஆட்சி புரிந்து தெற்கு நோக்கி பல்வேறு படையெடுப்புகளால் தென் திசை நோக்கி வந்தோம் . அப்படி வருகையில் உஜ்ஜைன் நகரிலும் ஆட்சி பரிபாலனம் செய்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அப்படி நம் குலம் காத்த ஈஸ்வரர் உஜ்ஜைனில் கொலுவிருக்கிறார் . இந்த திருக்கோவில் நமது செவ்வேலார் குலத்தார் ஒரு பிரிவினருக்கு குல தெய்வ கோவிலாகவும் உள்ளது.
இந்த திருக்கோவில் மிகவும் பிரமாண்டமாகவும் கலைநயமிக்கதாகவும் அமைந்துள்ளது.இந்த ஆலயம் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஒன்று.

உஜ்ஜைன் மத்திய பிரதேச  மாநிலத்தில் உள்ளது

இந்த அற்புதமான திருத்தலங்கள் அனைத்துக்கும்  சென்றுவாருங்கள் நம் குல அன்னையின் அருளை பெறுங்கள்.

இந்த திருத்தலங்கள் அனைத்தும் நம் குல முன்னோர்களின் அற்புத படைப்புகள் ஆகும் அவற்றை நமக்காக ஆராய்ந்து அளித்த புலவர் பெருமக்கள் அனைவருக்கும். நன்றிகள் - பார்த்திபன் தீபு, பொள்ளாச்சி


.பார்த்திபன்
பொள்ளாச்சி



மேலும் இது தொடர்பான பக்கங்கள்

தேவாங்கர் குல வரலாறு- இரண்டாம் பகுதி

தேவாங்கர் குலம் தழைத்த வரலாறு

தேவாங்கர்களின் புகழ் பரப்பும் ...